காற்றுக் குட்டிகள் !

நீண்ட விரல் அழகிகளின்
கரத்தாலோ - பேனா
முனைகளில் சிரத்தாலோ,
சிறு குழந்தைகளின்
சீறிவரும் சினத்தாலோ,
பசியுடனான சிறுகுடல்களின்
உச்சபட்ச உரசலாலோ,
சுதந்திரம் பெறுகிறேன் நான் !

அதி காரத்தோடு
அதிகாரமின்றி - வீட்டின்
கீழ்மூலையில் - வெற்று
உடம்போடு, துண்டாகி
துவண்டு கிடக்கிறது
உருளைகிழங்குகளின்
தூளாகிய உடல்கள் !

அவ்வீட்டில் - நான்
அடைபட்டு கிடப்பதால்
உப்பிய வீட்டை
காசாக்கும் வணிகம்
நான் வெளிவரும்வரை
என் செவிவருவதில்லை !

தான் சவத்து - சாபம் பெறாமல்
சவமாகி போகாமல்
சலவை செய்ததுபோல்
நெஞ்சு நிமிர்த்தி கிடக்க
நானே காரணமென்று
தெரிந்த காரணத்தால்,
எவ்வளவு காரமிருந்தும்
என்கண்ணை கண்ணீர்
காடாக ஆக்கியதில்லை,
அம்மாசத்து மகவுகள் !

உருளைச் சீவலுடன்
ஒட்டி உறவாடி, கட்டி கானம்பாடி
சீவல் சிங்காரிகள்
எதிரியின் - கடவாய்
பல்லுக்கு பலியாகும்
நிமிடங்களில் - காப்பாற்ற
வழியில்லா நிலையெண்ணி
கற்றாற்றில் குதித்து
மரிக்கிறது - பைகளில்
அடைபட்ட காற்றுக் குட்டிகள் !

(உருளைகிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் நிரப்பப் பட்டிருக்கும் காற்றைப் பற்றிய கவிதை இது)

எழுதியவர் : வினோதன் (22-Jan-13, 10:20 am)
பார்வை : 175

மேலே