நம்பி கெட்டவர்கள்

இருண்ட வானம்
இடியோசையின் நடுவே
விட்டு விட்டுப்
பெய்கிறது சாரல்!

பட்டினி கிடக்கும்
வயல் நாற்றுகள்
மெல்ல தலைநிமிர்த்தி
தாகம் தீர்க்கின்றன....

தனது இரண்டு தளிர்களை
பசுமையாய் துளிர்ப்பதற்குள்
நாற்றங்கால் முழுவதும்
பச்சை புல்களின் படையெடுப்பு....

களையெடுக்க
வீடு வீடாக
கூலிக்கு ஆள் தேடினால்
யாருமில்லை வீட்டில்....

விவசாய கூலிகளுக்கு
மதிப்புதானில்லை மனமும் இல்லையோ?

மாநிலமெங்கும் சென்று பார்த்தால்
நூறு நாள் வேளையில்
எல்லோரும் பங்கு கொண்டு
படுத்து தூங்குகின்றார்கள்
ரோட்டில்......

முக்கால் பங்கு
முளைத்த களையெடுக்க
முழு வயலையும்
விலை பேசிவிட்டு.....

அடுத்த நாள்
வானத்தைப் பார்த்தால்
இரண்டு கண்களையும் ஊடுருவி
கதிரவனின் வெளிச்சம்.....

ஆறு வாய்க்கால்
ஆழ்துளைக் கிணறு...

நம்பிக்கைத் துரோகிகளின்
பட்டியலில் மழையும்
இணைந்து கொண்டது!

இருந்த போதும்
எங்களின் பார்வையோ
இன்னும் நம்பிக்கையோடு
வானம் நோக்கி!

இது மண்ணின் வேதனையா?
இல்லை புத்திகெட்ட
மனிதனுக்கான போதனையா?

எதுவாக இருந்தாலும்
பரவாயில்லை ..

நாங்கள் மட்டும்
எப்பொழுதும் இயற்கையை
நம்பிக் கெட்டவர்களாகவே
இருந்துவிட்டு போகின்றோம்!!!

எழுதியவர் : க.கார்த்தீசன் (22-Jan-13, 8:47 am)
பார்வை : 218

மேலே