சுதந்திர உயிர் வாழல்

தூக்கணாங்குருவியென
எனக்கான இருத்தலை உறுதி செய்வதில்
எப்போதுமே தாமதிப்பதில்லை,
போலியிருத்தலுக்காய்
மழையிருட்டில் ஊர் கலைக்கும்
மாரித் தவளையென
அடுத்த விடியலில் சாவதிலும் உடன்பாடில்லை
வியாக்கியானமென்பது
வினையறுக்க முடியாத வீண் வேலை .
இருத்தலெனப்படுவது
சுதந்திர உயிர் வாழல் .
துர்ச் சூழல் சூளும் போதெல்லாம்
என்னில் தங்கிவிடாதபடி
நான் செய்யும்
உறுதியியல் போர் மிகப் பெரிது
எனது இருத்தலை உறுதி செய்யும்
வலிமை எனக்கு மட்டுமே
நான்
நீயன்று
நானே .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (22-Jan-13, 5:09 pm)
பார்வை : 179

மேலே