கருத்தப்பாண்டி..(தொடர் ) பகுதி.2

@@@@@
வழி அறிந்து ,வழியைக் காட்டி,அவ் வழியில் நடந்து செல்பவனே ஒரு நல்ல தலைவன்...!!
@@@@@@@@@@@

காலை ஆறு மணிக்கே அந்த டவுன் ஸ்டேஷனில் பரபரப்பு மிகுதியாய் காணப்பட்டது. ஜீப்பும் , வேனும் சரசரவென்று வந்தும் போயும் இருந்தன.

ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த பெட்டிக்கடையில் முண்டாசு அணிந்திருந்த ஆள் கடைக்காரத் தாத்தாவிடம் கேட்டான். “என்ன தாத்தா ரொம்ப வண்டியெல்லாம் வந்து நிக்கி? ஏதும் மந்திரிமாருக வாராகளா?”

சொல்ல வாயெடுத்த தாத்தா ஒரு டாணாக்காரன் அருகில் வரவே “ஏதும் தெரியலப்பா?” என்ற மென்று விழுங்குவதைக் கண்ட டாணாக்காரன் கோபமாகப் பேசினார், “என்னவே தெரியாது உமக்கு? சங்கரன் கோயில் கிட்டக்க ரெண்டு போலீஸ்காரங்களைக் குழி நிரப்பித் தள்ளி எரிச்சுப் போட்டது தெரியாது? ­ முன்ன பண்ண மாதிரி இந்த தபாவும்!... பாருவே இன்னைக்க ராத்திரி ­ அங்ஙனெ பாருவே! சொக்கப் பானைதேன் ­ ஊருக்கே சொக்கப்பானைதேன்” கறுவிக்கொண்டும் உருமிக் கொண்டும் தூரத்தில் டிஎஸ்பி ராகவாசாரி வண்டி வருவதைக்கண்டு, வாயில் இருந்த பீடியைக் கீழே போட்டுவிட்டு வேகமாய் ஓடினார்!

“அய்யா… அய்யா… தொப்பி ­ தொப்பியை மறந்துவைச்சுட்டுப் போறீகளே” என்ற முண்டாசுக்காரன் குரல் கேட்டுத் திரும்பி வந்த போலீஸ்காரர்தொப்பியை எடுத்துக்கொண்டு போனார்!

“தாத்தா… யாரு எரிச்சுப் போட்டாங்களாம்?” என்று முண்டாசுக்காரன் கேட்டான்!

“ஏன்யா… ஒமக்கு எந்த ஊர்? இந்தப்பக்கத்து ஆளா உன்னையைப் பார்த்தா தெரியலையே” என்றார் தாத்தா.

“ஏன் தாத்தா… என்னெயை தெரியலையா? பார்வை மங்கிப்போச்சா… நாந்தேன்” முண்டாசுக்காரன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு டாணாக்காரன் வந்து “தாத்தா… நல்ல கொழுந்து வெத்திலை கொடு ­ டிஎஸ்பி அய்யாவுக்கு. அப்படியே அவுக டிரைவர் கேட்டா ஏதும் கொடுத்துடு” என்று சொல்லி வெத்திலை வாங்கிக்கொண்டு வேக வேகமாய் ஓடினார்.

எதிரில் வந்த டிரைவர் ரெண்டு வெத்திலையை வாங்கிக்கொண்டு கடையை நோக்கி வந்து. “பெரிசு ரெண்டு கைமுறுக்கும், ரெண்டு மொந்தன்பழமும் கொடு! இன்னைக்கு அநேகமாய் ராத்ரிவரைக்கும் பட்டினியாகத்தான் இருக்கும்! எல்லாம் இந்த கருத்தப்பாண்டி பண்ண குசும்பு வேலைதேன்! அவனைப் பிடிக்க ஊருக்குள்ளே போன ஸ்பெசல் பிரான்ச் ஆட்கள் ரெண்டு பேரையும் எரிச்சுக் கொன்னுட்டான்! இன்னைக்கு அந்த ஊருக்கே அனத்த காலந்தேன்!” என்றுச் சொல்லி வாழைப்பழத்தின் தோலில் இருக்கும் வெண்மை சதைப்பற்றை வழித்துத் தின்னத் தொடங்கினார்!

“அய்யா தோலியை கீழே போட்டுடுங்க… ஊருக்குள்ளே நீங்கல்லாம் போனீயன்னா நெறைய கிடைக்குமே” முண்டாசுக்காரன் சொன்னான், நக்கலாய்!

அதற்குள் டிஎஸ்பி ராகவாசாரி ஸ்டேஷன் விட்டு வெளியே வரவே டிரைவர் வேகமாய் வண்டியை நோக்கி ஓடிப்போனார்!

“ஏன்யா… என்ன வேலை பார்க்கிறேள்? அவாதான் ரெண்டுபேரும் ஸ்பெசல் பிரான்ச் ஆளுகன்னும், இந்த ஏரியாவிற்கே புதுசுன்னும் தெரியுமோன்னா? ஏன் அவாளை தனியே அனுப்பினேள்? லோக்கல் ஆள் ஒருத்தன் கூட போயிருக்க வேண்டாம்? டிஐஜிக்கு என்ன ஜவாப்புயா நான் சொல்றது?” ராகவாச்சாரி சர்கிள் இன்ஸ்பெக்டருக்கு சரமாரியாய் வெத்திலை அதக்கின வாயால் கொட்டித் தீர்த்தார்.

“சார், அவுங்க ரெண்டு பேரும் விடலைப்பசங்க… அவார்டுக்கும் ரிவார்டுக்கும் ஆசைப்பட்டு நாங்க சொல்லியும் கேட்காம குற்றாலத்திலே கருத்தப்பாண்டியைத் தேடிப் போனாங்க. குற்றாலத்திலே கருத்தப்பாண்டி இருக்குறதா எங்களுக்கு வந்த இன்பர்மேஷனை அப்படியே நடவடிக்கைக்கு அவுங்க எடுத்துக்கிட்டாங்க” சர்க்கிள் பதில் கொடுத்தார். குற்றாலம் போன கருத்தப்பாண்டி போக்குக்காட்டி போனான் ­ பின் தொடர்ந்த நம்ம ஸ்பெஷல் பிராஞ்ச் ஆட்களைக் குழி நிரப்பித்தள்ளி கொன்னுட்டான்.

“சார்… மேலும் அவங்களுக்கு நம்ப லோக்கல் போலீஸ், கருத்தப்பாண்டியை சப்போர்ட் பன்றதா நினெப்பு… அதான் நம்ப ஆட்கள் மேலே நம்பிக்கை இல்லாம போயி இந்த மாதிரி ஆகிவிட்டது” இன்ஸ்பெக்டர் சொன்னார்!

“எது இருந்தாலும் உயிரைவிட்டது நம்ம காக்கிச்சட்டை குடும்பத்லே ஒருத்தரானோ? சும்மா விட்டுட முடியுமோ? மந்திரிசபைக்கே பதில் சொல்லணும்யா…! சரி… நைட்டுக்குள்ளே ஊரை ரவுண்ட் அப் பண்ணிடுங்க! அந்த கம்மனாட்டியை எப்படியாவது பிடிக்கனும்யா! நான் டிஐஜிக்கிட்டே பேசிடறேன்! ஊர் எல்லையிலே இருங்கோ! நான் ஸ்பாட்டுக்கே வந்துடறேன்!

“சார்… எப்படி சார்… நாம ஊருக்குள்ளே போக வேண்டியதுதானே… செத்துப்போனது இரண்டு டாணாக்காரங்க சார்” புதியதாய் பணியில் அமர்ந்த எஸ்ஐ பொரிந்தார்.

“தெரியும்… நேக்கு நன்னாத் தெரியும்! போனதடவை என்ன ஆச்சுன்னு நேக்குத் தெரியுமோ? சும்மா துள்ளாதே!”
டிஎஸ்பி வீட்டிற்குக் கிளம்பினார்!

“சார் என்ன சார் இது? டிஎஸ்பி இப்படி பேசிப் போறார்? எஸ்ஐ வினவினான்!

“தம்பி நீங்க நியு ரிக்ரூட்… வேகம் இருக்கத்தான் செய்யும். கொஞ்ச நேரம் பொறுத்து டிஎஸ்பி வீட்டுக்குப் போய் நானே பேசி வர்றேன். இப்போ எல்லாரையும் அலர்ட் பண்ணி ஸ்குவார்ட் பார்ம் மண்ணுங்க” சர்க்கிள் கூறினார்.

எல்லோரும் கலையத் தொடங்கினர்!

அதற்குள் பெட்டி கடைக்குள் கும்பல் கும்பலாய் மக்கள் கூடத்தொடங்கினர்! கருத்தப்பாண்டி எரித்துப் போட்ட டாணாக்காரர்களைத் தாங்கள் பார்த்ததாகவும் சிலர் “சுருள்” விட்டனர்! சிலர் கருத்தப்பாண்டியை அந்த இருவரும் சுட்டுவிட்டதாகவும், அதனால்தான் இம்மாதிரி நடந்ததாகவும் ரீல் விட்டனர்!

முண்டாசுக்காரன் இவர்களின் பேச்சையே கவனிப்பதைக் கண்ட தாத்தா “ஏன்யா… நீர் யாரு” என வினவினார் மீண்டும் ­ யாரும்
டாணாக்காரனா இருந்து விட்டால்!

தாத்தாவின் அருகில், கடையின் பக்கவாட்டில் நுழைந்து, தாத்தா கையில் நுனி கருத்த தாம்புக்கயிற்றைக் கொடுத்து முண்டாசுக்காரன் வேகமாய் கிளம்பிச் சென்றதைத் திகைப்புடன் பார்த்தார் தாத்தா!

சட்டென்று கடையை இழுத்து மூடிவிட்டு தனக்கு உதவிக்கு கடையில் இருந்த தனது பேரன் கையில் கயிற்றைக் கொடுத்து அவன் காதில் ஏதோ சொன்னார்!

பேரன் சைக்கிளில் சங்கரன் கோயில் மெயின்ரோடு நோக்கி விரைந்தான்!
---------கருத்தைப் பாண்டி மீண்டும் வருவான்..

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ )அகன் (22-Jan-13, 9:06 pm)
பார்வை : 87

மேலே