குடியரசுதின அணிவகுப்பில் தேசிய தமிழன்

நானொரு இந்திய
ராணுவ வீரன்!

மிடுக்காய் நடக்கிறேன்
அணிவகுப்பு ஒத்திகையில்...

ஆர்ப்பரித்து பறக்கிறது
மூவர்ணக் கொடி!

ஒரே சிந்தனை
ஒரே சிந்தனை
எம் குடியரசின்
வீர தீரத்தை காட்டும்
அதே சிந்தனை!

எங்கள் பூட்ஸ்கால் ஓசையில்
புளங்காகிதம் அடைகிறது தேசம்!

எங்கள் துப்பாக்கிகளின் சத்தத்தில்
முகமலர்ந்து சிரிக்கின்றன
குடியரசு மாளிகைப் பூக்கள்!

சங்கை மொழிகளுக்கேற்ப
கம்பீரமாய் அசைகின்றன
எதிரிகளுக்கு
சிம்ம சொப்பனமாய் விளங்கும்
எங்கள் தலைகள்!

கடைசிக் குடிமகனின்
பாதுகாப்புக்கான வளையத்தை
உறுதி செய்தவாறு
முப்படை வீரர்கள்...

சிவபதம் அடைவதை
சுகமுடன் எதிர்நோக்கும்
மேஜர்கள்....

கர்த்தருக்குள்
எப்பொழுது வேண்டுமானாலும்
நித்திரையடைய காத்திருக்கும்
கர்னல்கள்....

சீக்கிய சிப்பாய்கள்
பீகார் பட்டாலியன்கள் ....

இரத்த சம்பந்தம் இல்லாமல்
வடக்கும் தெற்குமாய்
சொந்தம் கொண்டாடும்
எங்கள் வீரர்கள்....

எல்லோருக்கும் நடுவில்
எல்லா ஆண்டுகளையும்போல்
இந்த ஆண்டும்
மிடுக்காய் நடக்கிறேன்
நானொரு இந்திய வீரனாய்!

மன்னிக்கவும்
நானொரு தமிழ் வீரனாய் ...!

இனியும் நானொரு
இந்திய வீரனென்று சொல்ல
மனசாட்சியைப் போல
பாதங்களும் தடுமாறுகின்றன!

எம் தாய்த்தமிழர்களை கொல்லும்
சிங்களக் கூலிப்படைக்கு
பயிற்சியளிக்கிறது இந்தியப் பட்டாளம் ...

இதுவா?
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
ஒரே தேசியத்திற்கான அடையாளம்?

தேசியக் கொடியின் மீது
சிதறும் பூக்களுக்கிடையில்
உதறுகின்றன
வீர வணக்கம் செய்யும்
என் கைகள்!!!!!

எழுதியவர் : க. கார்த்தீசன் (25-Jan-13, 10:16 pm)
பார்வை : 381

மேலே