குழந்தை உள்ளம் ( KG மாஸ்டர் )
நிகழக்கூடிய விடயங்களை விட நிகழ வேண்டும் என எதிர் பார்க்கும் விடயங்களில் தான் எமது வாழ் நாட்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையின் முக்கால் புகுதியைக் கடந்தவர்கள் கூட எதிர்பார்ப்பில் தான் மிகுதிக் காலத்தையும் செலவு செய்துகொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்புக்குக் காரணம் எது என்பதை ஆய்வு செய்யக் கூட அக்கறை செலுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றங்கள் தான் எதிர்பார்புக்களுகான விதைகளாகின்றன என்பதை அறிந்து கொண்டால் எதிர்பார்ப்புக்களைத் தவிர்த்து ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
அதாவது கடந்த கால எதிர்பார்ப்புக்களில் ஏற்பட்ட ஏமாற்றங்களே எதிர் கால எதிர்பார்ப்புக்களுக்கான காரணியாக அமைந்துவிடுகின்றன. இந்த எதிர்பார்ப்புக்கள் எமது மனதில் பேராசையைத் தூண்டிவிடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் கிடைப்பதை விடக் கிடைக்க வேண்டியது அதிகமாக இருக்கவேண்டும் என்ற நப்பாசையால் கிடைத்ததையும் இழந்து விடுகிறோம். இவ்வாறு பல வழிகளில் அடி மேல் அடி வாங்கினாலும் எதிர்பார்ப்பு என்ற கற்பனை உலகம் அந்த அடிகளின் வலியைச் சுமந்த வண்ணம் என்றாவது ஒரு நாள் 'அடிப்பவர்கள் களைத்துப் போவார்கள் நீ கவலைப்படாதே' என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பதை நாம் உணருவதில்லை.
இப்போது, எதிர்பார்ப்புக்களில் காலத்தின் பெரும் பகுதியை வீணாக்கிக் கொண்டிருப்பவர்களின் குண இயல்புகளைப் பார்ப்பதற்கு முன்பாக இவர்கள் இழந்து கொண்டிருக்கும் மிக முக்கியமான, மீளப் பெற முடியாத ஒன்று என்னவெனில் நிகழ் காலத்தில் வாழாமல் இருப்பது தான். அதாவது நேற்றைய நினைவுகளுடனும் நாளைய கனவுகளுடனும் வாழ்வதால் 'இன்று' என்ற அற்புதமான கொடையை இழந்து விடுகிறாகள். வாழ்க்கையின் மிகவும் வலிமை மிக்க விடயம் என்னவெனில் ' இன்று வாழாதவர்கள் என்றுமே வாழ்வதில்லை' என்பது தான். அதாவது இன்றைய விதை நாளைய அறுவடை என்பதால் இன்று விதப்பதைக் கைவிட்டு விட்டு நாளைய அறுவடையை எதிர்பார்ப்பது நாம் செய்கின்ற மிகப் பெரிய தவறு.
நிகழ் காலத்தில் வாழாதவர்கள் தமக்குச் சொந்தமாக்கியுள்ள விடயங்களைப் பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் நாமும் அதன் அங்கத்தவர்களாக இருக்கும் வரை எம்மால் அதை இனங்கண்டு கொள்ள முடியாமல் போகின்றது. எப்போதாவது சிறிது புரிந்துணர்வு ஏற்பட்டவுடன் எம்மையே நாம் எண்ணி வெட்கப்படுவோம். 'அட முட்டாளே' என்று எம்மை நாமே திட்டிக் கொள்வோம். அனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அதே குட்டைக்குள் சென்று விடுவோம். அப்படி என்ன நிகழ் காலத்தில் வாழாதவர்களது குட்டைக்குள் இருக்கும் என்று கேட்கிறீர்களா? இந்தக் குட்டை மிகவும் மோசமான நாற்றம் நிறைந்த குட்டை. அதற்குள் போட்டி, பொறாமை, சுயநலம், துரோகம், பொய், களவு, அகம்பாவம், போலித்தன்மை போன்ற மிகவும் மோசமான நாற்றங்களைத் தரும் விடயங்கள் இருக்கும். ஒரு விடயமே துர்நாற்றமாக இருக்கும் போது இத்தனையும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்?
உண்மையில் எம்மிடம் இவ்வளவு மோசமான குணங்கள் இருக்கின்றனவா என்று எம்மை நாம் கேட்பதே ஒரு வேடிக்கையாக இருக்கும். ஏனெனில் ‘எனக்கு நான் எப்பொழுதும் நல்லவன். எதைச் செய்தாலும் நல்லதற்காகவே செய்கிறேன். மற்றவர்கள் தான் புரிந்து கொள்கிறார்கள் இல்லை’ என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். அதனால் எம்மைப் பற்றிய ஒரு மீளாய்வு என்பது பெரும்பாலும் சாத்தியமற்றதாகவே அமைந்து விடுகின்றது. இருப்பினும் அந்த நாற்றங்களில் இருந்து விடுபட்டுக்கொள்ள மிகவும் இலகுவான வழி ஒன்று இருக்கின்றது. அது தான் குழந்தை உள்ளத்துடன் வாழ்வதுதான். குழந்தைகள் கடந்த கால நினைவுகளிலோ அல்லது எதிர் காலக் கனவுகளிலோ வாழ்வதில்லை. நிகழ் காலத்தில் மட்டுமே வாழ்கிறார்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவிப்பதால் முழுமையான மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.