அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!

அன்பு வீசினாலே
அடிமையாகும் எங்கள்மீது
அமிலம் வீசினால் அடுக்குமா?

சிதறி விழும் அமிலத்தால்
சில நொடிகளில்
சிதைந்து போகிறது முகம்!
வாழும்வரை வதைந்து
சாகிறது மனம்!

கரையகற்றுவதுதானே அமிலத்தின் இயல்பு?
கரைகள் உங்கள்
மனதில் உறைந்திருக்க,
அமிலத்தை எங்கள்மீது எறிவது
எவ்விதத்தில் நியாயம்?

காதல் மறுக்கும் முகங்களைக்
கோரமாக்க நினைக்கும்
உங்களில் எத்தனைபேர்
காதலிக்கும் பெண்களையே
தாரமாக்கத் தயாராயிருக்கிறீர்கள்?

உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலெல்லாம்
உறங்கிக் கிடக்கும் உங்கள் கோபம்
உள்ளம் தரவில்லையென்பதற்காக
எங்கள் உயிர் பறிக்கத் துணிவதெப்படி?

அப்பாவிகள் எங்கள்மீது
அமிலம் வீசப்படும்
அத்தனை முறையும்,
ஒருபுறம் வெந்து தணிகிறது
எங்கள் தேகம்!
மறுபுறம் வெக்கிக் குனிகிறது
இந்த தேசம்!

அவசரக் காதலை
அலட்சியம் செய்வதற்கே
அமில தண்டனை என்றால்,
திருமதிக் கனவுகள் சுமந்து
திருமணச் சந்தையில் காத்திருந்து
திசைக்கொரு ஆண்களால்
தினம் தினம் நிராகரிக்கப்படும்
நாங்களுமல்லவா ஏந்த வேண்டும்
அந்த நச்சு அமிலத்தை?

நிராகரிப்பதற்கு எங்களுக்கிருக்கும்
நியாயமான உரிமைகளை
நினைவில் கொண்டபின்
நீட்டுங்கள் உங்கள்
காதல் கடிதங்களை!

அதுவரை அமிலங்களையெல்லாம்
ஆய்வுக் கூடங்களிலும்
அதனதன் இடங்களிலும்
அமைதியாய் இருக்க விடுங்கள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (27-Jan-13, 9:21 pm)
பார்வை : 210

மேலே