தங்க ஓர் இடம் வேண்டும்...
சுவர்தனில் வரைந்த ஓவியம்தனை
சுவடில்லாமல் திருடும்
சுயநலவாதிகள் வாழும் பகுதி தவிர்த்து
தவறில்லா உலகம்தனில்
தவிப்பில்லா மனிதர்சூழ
தங்க ஓர் இடம் வேண்டும்
பணம் எனும் தாளுக்காக
பரந்த வளம் தனை கூறு போடும்
பணக்காரன் வாழும் பகுதி தவிர்த்து
பட்டினியில்லா உலகம்தனில்
பார்வைஎங்கும் வளம் சூழ
தங்க ஓர் இடம் வேண்டும்
அடுக்குமாடி அடுத்த மாடி உயர
அரவணைப்பின்றி தெருவில் உறங்கும்
அடிமை எனும் ஏழை வாழும் பகுதி தவிர்த்து
பகுத்தறிவால் பக்குவம் கொண்டு
பாரெங்கும் அன்பு சூழ
தங்க ஓர் இடம் வேண்டும்
சாதி,மதம்,பேதம் என
சலிப்பின்றி சவால் விடும்
சமாதானம் அற்ற பகுதி தவிர்த்து
நரம்பு ஏற்கும் குருதியின்
நிறம் ஒன்றென வாழும் மக்கள் சூழ
தங்க ஓர் இடம் வேண்டும்
உலகம் பார்த்த நொடிமுதல்
உருவமில்லா சவால்கள்
உறக்கம் தொலைத்து தேடும் பகுதி தவிர்த்து
பொறாமை,போட்டியில்லா
தாய்மையின் கருவறை போல
தங்க ஓர் இடம் வேண்டும்...