வெற்றியின் ஆதியிலே பதுங்கியிருக்கிறேன்

களமாடிய களைப்பேதுமின்றி
காலத்தின் கை விலங்கிற்கு கைதியாக்கி
முன்னர் என்றுமில்லாதபடியாய்
தருவிக்கப்பட்டிருக்கும்
வேசி கூட்டத்து வசதிகளை
அனுபவிக்குமாறு
வன்ம வற்புறுத்தலோடு
சூழ்ந்திருக்கிறது பெரும் கூட்டம்

ஆடைகள் கிழிந்தபடியும்
அவையங்கள் தொங்கியபடியும்
நிராயுதபாணியாய்
ரத்தச் சகதியில்
ஓரினத்தை புதைத்த வரலாறு
உலக
மனிதத்தின் மீதான பிணப் பரிசோதனையே.

நினைக்கவே விறைக்கும் எத்தனையோ நாட்களை
என் ஆதித் தாயின்
மேல் விழுந்த தளும்புகளுக்காய்
அர்ப்பணம் செய்திருக்கிறேன்.

நடையின் வடிவங்கள் மாற
மிக அருகில் தெரிகிறது
மகிழ்ச்சிகள் மீள வருவதாய்
உணரும் இக்காலம் ?

இயற்கை தருவித்த இருள் பரிசில்
அநாதையின் மனமென
ஒளியின்றிக் கிடந்தது
மனிதமற்ற உலகம்

எளிதில் நெருங்கி விட முடியாத
வெற்றியின் ஆதியிலே
பதுங்கியிருக்கிறேன்
தேச வரமொன்று வேண்டியபடி. . . .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (29-Jan-13, 5:58 pm)
பார்வை : 195

மேலே