பகுத்தறிவு ( KG மாஸ்டர் )

நாம் பிறக்கும்போது முற்று முழுதாகப் பலவீனமானவர்கள். ஏனைய விலங்குகளைப் போல் முன்கூட்டியே நிரல் படுத்தப்பட்ட (Pre-Programmed) வாழ்க்கை முறையை நாம் கொண்டிருப் பதில்லை. எமது முதலாவது உணவுக்குக் கூட இன்னொருவரது தயவு வேண்டியுள்ளது. ஒரு பசுக் கன்று தனக்குப் பசி ஏற்படும் போது தாயை நாடிச் சென்று பசியைத் தீர்க்கும். ஆனால் நமக்கோ தாய் எம்மை நோக்கி வந்து உணவு தர வேண்டியுள்ளது.
அந்த அளவுக்கு மனிதன் முற்றிலும் பலவீனமானவனாகத் தான் பிறக்கிறான். இதற்குக் காரணம் முன்கூட்டியே நிரல் படுத்தப்படாத ஆரம்பம். ஒரு பதிவுகளும் இல்லாத வெற்றுத் தாள் தான் எமது வாழ்க்கையின் ஆரம்பம். விலங்குகளைப் பொறுத்தவரையில் அவற்றின் நிகழ்ச்சி நிரல் பொதுவானவை. அவற்றின் செயற்பாடுகள் உணவு, உறக்கம், இனப்பெருக்கம் என் அமைந்திருக்கும். ஆனால் மனிதனோ இந்தச் சுழற்சிக்கும் அப்பால் எத்தனையோ செயற்பாடுகளைச் செய்பவனாகின்றான்.
மனிதன் பகுத்தறிவு உள்ள மிருகம். பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்குப் பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. பகுத்து ஆராயும் அறிவு பகுத்தறிவு எனக் கூறுபவர்களும் உண்டு. மிருகங்களுக்கும் இந்தப் பகுத்து ஆராயும் அறிவு உண்டு. அணில் ஒன்றுக்குக் கனியையும் கல்லையும் பகுத்துப் பார்க்கும் அறிவு உண்டு. பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவு என்பதும் விலங்குகளால் இயலாத ஆனால் மனிதனால் மட்டும் செயற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டிய அறிவு என்பதும் பொதுவாக நாம் எல்லோரும் அறிந்த விடயம்தான்.
ஆனால் இந்த அறிவானது அதன் பயன்பாட்டினால் ஏனைய விலங்குகளில் இருந்து மனிதனை வேறுபடுத்த வேண்டியதும் அவசியமல்லவா! அதாவது மனிதனால் மட்டும் தான் இந்த விடயத்தைச் மேற்கொள்ள முடியும் என உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அது என்ன? அது தான்... தரப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் அறிவு. இடம், பொருள், காலம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் அறிவுதான் பகுத்தறிவு.
இது மிகவும்
நுணுக்கமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமுமாகின்றது. ஏனெனில் மனிதர்கள் பகுத்தறிவு படைத்தவர்கள் எனக் கூறப்பட்டாலும், பகுத்தறிவு பேசுபவர்கள் எனவும் பகுத்தறிவு உள்ளவர்கள் எனவும் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள். அதாவது, தன்னையும் தான் சார்ந்த சூழலையும் புரிந்தவர்கள் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏனையவர்கள் பகுத்தறிவு பேசுபவர்கள்.