சுமைதாங்கிகள்

இமைப் பொழுதும் வயிற்றில்
இமைகள் திறந்திடும் நேரம்வரை
மாதங்கள் பத்தும் சுகமாய் சுமந்திட்ட
அன்னையர் அனைவரும் சுமைதாங்கி !

உருவான உடலுடன் உலவிடவே
உயிராய் உலகினில் வளர்ந்திடவே
அறிவுடன் ஆற்றலைப் பெற்றிடவே
பாடுபடும் பெற்றோர் சுமைதாங்கி !

இல்லறம் துவக்கிடும் இதயங்கள்
நல்லறம் பேணிக் காத்திடுவோர்
ஒருவரை ஒருவர் தாங்கிடுவோர்
ஒருவகை பூமியில் சுமைதாங்கியே !

சுமைமிகு பொருட்களை சுமந்திட்டு
சாலையில் வலம்வரும் வாகனமும்
கற்றிடும் மாணவர்களை கரைசேர்க்க
அல்லல்படும் ஆசிரியர்களும் சுமைதாங்கி !

சமத்துவக் கொள்கைகள் தழைத்திட
தத்துவமாய் வாழ்பவரும் சுமைதாங்கி !
சமுதாயக் கடலில் சோர்விலா நீந்திடும்
சமதர்மத் தலைவர்களும் சுமைதாங்கி !

இன்றைய தலைமுறை இன்பம்பெறவே
வருங்காலம் வளமுடன் இருந்திடவே
வருத்தமுடன் வாழ்ந்திடும் பெரியோரும்
முனகிடும் முதியோரும் சுமைதாங்கி !

சுமைகள் இல்லா உயிர்கள் இல்லை
சுமைகளை தாங்கிட மனங்கள் தேவை !
சுமையை சுகமாய் நினைக்கும் நெஞ்சங்கள்
சுமையறியா இதயங்கள் இவ்வுலகில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Feb-13, 10:20 pm)
பார்வை : 124

மேலே