காலம் என்ன செய்யும் காலம் ?

காலம் என்ன செய்யும் காலம் ?
காலை விடிந்த பின்னும் நீ உறங்கிக் கிடந்தால்
காலம் என்ன செய்யும் காலம் ?

காலெடுத்து நடக்காமல் நீ முடங்கி கிடந்தால்
காலம் என்ன செய்யும் காலம் ?

காலத்தின் கதவு திறக்க நீ காத்துக் கிடந்தால்
காலம் என்ன செய்யும் காலம் ?

காலத்திற்கு கதவும் கடிவாளமும் இல்லை என்று
நீ அறியாதிருந்தால்
காலம் என்ன செய்யும் காலம் ?

காலமும் கடல் அலையும் காத்திருப்பதில்லை
என்பதை நீ மறந்திருந்தால்
காலம் என்ன செய்யும் காலம் ?

கோழி கூவியா விடியுது காலம் ?
விடியும் போது கூவுது கோழி என்று நீ அறியாவிடில்
காலம் என்ன செய்யும் காலம் ?

வாழ்வுக்கு விடியலை வைத்தது காலம்
காதலுக்கு மாலையை வைத்தது காலம்
கற்பனைக்கு நீலமாய் விரிந்தது காலம்
கனவுக்கு இரவை விரித்தது காலம்
உனக்காகவே உலகில் உலவுது காலம்

காலம் வேறு என்ன செய்ய வேண்டும் காலம் ?

----கவின் சாரலன்

கவிக் குறிப்பு : கவி நண்பர் பழனி குமாரின்
கவிதை , " காலம் செய்த குற்றம் " , தூண்டிய
கவிதை.

எழுதியவர் : கவின் சாரலன் (1-Feb-13, 10:06 pm)
பார்வை : 161

மேலே