சிநேகிதம்
நரைதழுவ கால்பிசக கைத்தடியை
தோழமையைக் கொண்டு ஒரு பயணம்
சிநேகிதனைக் காண கால்நடையாய்!
எவ்வளவு நேரம் பேசினாலும்
போதவில்லை வெற்றில்லையும் வெந்நீரும்
கண்ணீரும் கவலைகளும் பரிமாற
வார்த்தைகள் தடுமாற நினைவுகள்
நெஞ்சை நிறைக்க மீண்டும்
கொல்லென ஒரு சிரிப்பு !
கோமணம் முதல் பாடைவரை
கண்ட அந்த கண்களுக்கு
இன்றைய நட்பு ஒருவேடிக்கை !
குடும்பம் முதல் குறும்புவரை
அத்தனையும் தெரிந்த அந்தசிநேகிதம்
எதையும் வெளிப்படையாய் சொல்லும்
இயல்பான சிநேகிதம் வாழத்துமடலும்
சோறும் கிழங்கும் திருட்டுக்
கனிகளும் பாறைகளின் இடுக்கும்
மரத்தின் கிளைகளும் செம்மண்ணின்
சுவைகளும் தவளைகளின் தண்ணீரும்
குளத்து மீனும் புளியமரத்து பேயும்
தாவணிக் கனவுகளும் திரைப்பட
கொட்டகைகளும் மிதிவண்டி ஓட்டங்களும்
கபடிக்களங்களும் கிணற்று நீச்சல்களும்
திருமணப் பந்திகளும் வசவுகளும்
திரும்பிப் பார்க்கும் அந்தசிநேகிதம் !
எந்தவித இடையூரும் இல்லாத
அந்தக் கால சிநேகிதம்!