காக்காய் கறி சமைத்து....
சிலேடை வரிகள்
=================
"காக்காய் கறி சமைத்து கருவாடு
மென்று தின்பர் சைவர்"
இந்த சிலேடை வரிகளைப் படிக்கும் சைவர்களுக்கு கோபம் வரலாம். ஏனென்றால் மேம்போக்காகப் பார்த்தால் காக்கையை கறியாக சமைத்தும், கருவாட்டினை அப்படியே மென்று சாப்பிடக் கூடியவர்கள் சைவர்கள் என்றும் பொருள் படுகிறது. ஆனால் உண்மையான பொருள் அதுவன்று. இந்த சிலேடை வரிகளை எழுதிய கவிஞருக்கு ஆனாலும்
குறும்பு கொஞ்சம் அதிகமாக இருக்க
வேண்டும். சைவர்களை கேலி செய்வதுபோல் எழுதிவிட்டு, அவர்கள்
உயிர்களுக்கு தீங்கு செய்யாதவர்கள் என்பதை
உணர்த்துகிறது இந்த சிலேடை வரிகள்.
காக்காய் = கால் காய் = காய்கறியின் ஒரு சிறு அளவினைக் குறிக்கிறது.
கருவாடு மென்று = கரு வாடுமென்று = உயிரானது வாடும் என்று
பட்டினிப் போட்டு தன் உயிரை வருத்திக் கொள்ள மாட்டார்கள் சைவர்கள். ஒரு சிறு அளவிலேனும் காய்கறிகளை சமைத்து தன்னுடைய கரு, அதாவது தன் உயிர் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக உண்பார்கள் சைவர்கள் என்பதே இதில் அடங்கியுள்ள சிலேடையான கருத்தாகும். என்றோ "கல்கி" வார இதழில் நான் படித்து ரசித்தது. இவ்வரிகளுக்கான விளக்கத்தினை அளித்திருந்தவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
("கல்கி" வார இதழின் "கண்ணதாசனின் பக்கம்" என்கிற பகுதியிலிருந்து)