வாழ்கை

நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

பிரியம் கொண்ட
நம் காதலுக்குள்,
பிரியம் தொலைக்க வைத்த
உன் ஆளுமையை,
அன்றே தான் நீ உணர்ந்தாயா?...

பிரியச் சிலுவைக்குள்
அகப்பட்ட என் பாசம்,
முள்ளில் சிக்கிய
சேலையாய் மாறியதை
நீ அறிந்தாயா?...

என் விருப்பங்களும்,
வெறுப்புகளும்,
உன் அனுமதியில் இருக்கவேண்டும்
என்ற உன் ஆண்மைத்திமிரை,
அன்பாய் நான் பாவித்தது உனக்கு
புரியாதா?

பெண் என்ற
வரையறையை வகுத்திட்ட
வர்க்கத்திலே,
தனிரகம் என்றே உன்னை நினைத்திட்டேன்...
நீயோ,
தர்க்கம் செய்தால் தாவிக் குதிக்கிறாய்...
நட்பு வட்டம் கூடாதென்று கட்டளை இடுகிறாய்...
சிரித்து பேசினால் வேஷம் என்கிறாய்...
கோபமாய் பேசினாலோ பொறுமையாய்
இருப்பதுவே பெண்ணுக்கு அழகென்கிறாய்...
தனிப்பட்ட என் விருப்புக்கும் தடை இடுகிறாய்...

உயிர் அற்று போகும் வலிகளை தந்து
அன்பென்று ரசிக்கிறாய்
நீ...
ரணங்களை சுகங்களாய் மாற்றிட
சுயம் தொலைக்கிறேன்
நான்...

உன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும்
என்மீதான காதல் என்றே
அறிந்திருந்தேன்...
ஆனால் அனைத்தும்
உன் ஆண்மையின் இயலாமை
என்றே உணர்ந்தேன்,
உன்னிடம் உரைத்தேன்....

கடைசியாய்,
காதல் பேசிய உதடுகள்
கனல் அள்ளி வீசியது....
வஞ்சித்து விலகியவர்
இடத்தில் என் பெயரும் வந்தது..

உன்னை நீங்கி வாழ்தல்
சாத்தியம் இல்லாத சத்தியம்
என்றே உணர்ந்தாலும்,
நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்...

வருடங்கள் தொலைந்தாலும்,
இளமையது கரைந்தாலும்,
நான் மட்டும் விவாகரத்து
ஆனவள்...
நீ....
புதுமாப்பிளை...

இது என்ன நியாயம்
யாரேனும் கேளுங்கள்...

எழுதியவர் : (4-Feb-13, 6:16 pm)
சேர்த்தது : raja1987
பார்வை : 130

மேலே