சினம்

நமக்குள் உறங்கும்
நரகாசுரன்!

நம் நரம்புகளில்
நச்சேற்றும் நாகப்பாம்பு!

கல்லறைப் பயணத்திற்கான
கடவுச்சீட்டு!

மயானத்திற்கான மாற்றுப்பாதை!

மனங்களை ரணமாக்கும்
மடமை!

நம் மூளைக்குள்
முளைக்கும் முள்செடி!

நிம்மதியின் நிரந்தர எதிரி!

வன்முறையின் வரவேற்பறை!

பந்தங்களை அறுக்கும்
பயங்கர ஆயுதம்!

நம் பகுத்தறிவைப் பற்றியிழுக்கும்
பாழுங்கிணறு!

அநாகரீகத்தின் அடுத்த பரிணாமம்!

கோழைத்தனத்தின் கோரமுகம்!

பிரியமானவர்களையும்
பிரியவைக்கும் பிசாசு!

நம் புன்னகையைப்
புசித்து வளரும் புற்றுநோய்!

தவணை முறையிலான தற்கொலை!

நம் சிந்தனையைச் சிறைபிடிக்கும்
சிலந்திவலை!

சமாதானத்திற்கான சவக்குழி!

நம் திறமைகளைப் பொசுக்கும்
திராவகம்!

ஒட்டுமொத்த நோய்களின்
ஒரே பிரதிநிதி!

வளர்த்தவரையே வளைத்தெரிக்கும்
வன்ம நெருப்பு!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (6-Feb-13, 1:05 pm)
பார்வை : 237

மேலே