கடவுள் கடவுளாகிப்போனார் - 9
கடவுள் – 9
ஏர்பிடித்து உழ ஆரம்பித்தார் கடவுள்.
வறண்டு இருந்தது பூமி.
கடவுளே மழை பெய்ய வெக்கக்கூடாதா?
மழை பெய்தது.
ஏர்பிடித்த பாதி வயல்
மழையால் சேறாகிப் போனது.
3 நாள் கழித்து
ஏர் பூட்டி
முன்பு உழுத இடத்திலிருந்தே
ஏர் பிடிக்கத் தொடங்கியதும்
பூமி ரொம்ப ஈரமா இருக்கு என்று
சலித்துக்கொண்டார்.
டிராக்டர் பிடித்து உழவு செய்தார்
விதைத்தார்.
நாற்றுநடவும் களை எடுக்கவும்
100 நாள் வேலையால் பாதிக்கப்பட்டதாக
வருந்திக்கொண்டார்.
அறுவடைக்கும் யாரும் வரவில்லை
அறுவை எந்திரம்கொண்டு காரியத்தை முடித்தார்.
கணக்குச் சரி பார்த்தலில்
செலவே அதிகம் இருந்தது.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
நிலத்தை வீட்டுமனைபோடுவோரிடம்
5 கோடிகளுக்கு விற்றுவிட்டு
நகரத்தில் வீடு கட்டி குடியேறிவிட்டார்!