வருமுன் காத்துக் கொள்வது நல்லது
நான் சென்ற மாதம், சனவரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கேரளாவிலுள்ள சோட்டானிக்கரா (னி அல்லது ணி எது சரி?) பகவதியம்மன் கோவிலுக்கும், 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் சாமி கும்பிட சென்றிருந்தேன். பகவதியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது எளிதாயிருந்தது. கோவிலைச் சுற்றி வந்த போது பலவிதமான அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகள் ஆங்கிலம், மலையாளம், தமிழில் வைத்திருந்தனர். அதில் தமிழில் இருந்த அனைத்து வாசகங்களும் பிழைகளுடனேயே இருந்தன.
DONATE GENEROUSLY என்று ஆங்கிலத்திலும், கீழே தமிழில் ’பண உநவி செய்ய வேண்நம்’ என்றும், இன்னொரு அறிவிப்பில் பட்டு, தாலி, ஆள்ரூபம், ஆகியவற்றை (றையில் றவிற்கு மேல் புள்ளி, எப்படிப் போட்டார்கள் என்று தெரியவில்லை) வெளியில் வாங்கி ஏமாந்து போக வேண்டாம். உண்மயான பட்டு, தாலி, ஆள்ரூபம் தேவஸம் கவுண்டரில் பெற்ருகொள்ளுங்கள் என்றும் இருந்தது. உண்மையான என்பது உண்மயான என்றிருந்தது.
இதை யாரிடம் சொல்லி சரி செய்யலாம் என்று யோசித்து அலுவலகத்தில் செயல் அலுவலரைப் பார்க்கலாம் என்று முயன்றேன். அவர் இல்லாததால் மேலாளரை அணுகினேன். மேல்சட்டை இல்லாமல் அமர்ந்த அவரை அணுகி சொன்னதும் அக்கறையின்றி பதில் சொன்னார். யாராவது ஒருவரை உடன் அனுப்புங்கள், நான் சரியாக எழுதித் தருகிறேன் என்றேன். அதற்கும் அவர் ஆள் அனுப்பவில்லை.
குருவாயூரிலும் அதே நிலைதான். ஆனால் நான் யாரையும் அணுகவில்லை. குருவாயூரில் மாலை 4.30 மணிக்குச் சென்றோம். கோவில் வெளி மண்டபத்தில் வளைந்து வளைந்து செல்லக்கூடிய வகையில் கம்பி அமைத்திருந்தார்கள். சுமார் 40 முதல் 50 முறை சுற்ற வேண்டியிருந்தது.
கோவில் உட்பிரகார மண்டபத்தில் நுழையும்போதே கிருஷ்ணன் நல்ல காட்சி தருகிறார். ஆனால் அருகில் சென்று பார்க்க இடதுபுறம் திரும்பி, சிறிது நடந்து 13 படிகள் ஏறி, சில அடிகள் நடந்து, 13 படிகள் இறங்கி சுவாமியை ஒருசில நொடிகளே தரிசிக்க முடிகிறது. முதியவர்களுக்கும், உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது மிகச் சிரமமாகவே இருக்கும்.
கொச்சியில் என் மகன் தயவால் நாங்கள் தாஜ் மலபார் நட்சத்திர ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பொழுது 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியிலிருந்து 6.45 மணி வரை கடல் உள்வாங்கிய ’பின் தண்ணீரில்’ (Back waters) படகில் கூட்டிச் சென்று அருகில் உள்ள தீவுகளை படகிலிருந்தபடியே காட்டினார்கள்.
படகில் ஏறுவதற்கு முன் அங்கு பணியில் உள்ள பெண், பார்க்கப்போகும் இடங்களை விவரித்து, படகில் ஏறுமுன் விருப்பப்பட்டவர்கள் ’உயிர்காப்புச் சட்டை’ (Life jacket) போட்டுக் கொள்ளலாம் என்றார். ஆனால் யாரும் சட்டை (Life jacket) போடாதது மட்டுமல்ல, அவர் சொன்னதை யாரும் (நான் உட்பட) சட்டை செய்யவில்லை.
அடுத்த நாள் காலையில்தான் சென்னையிலிருந்து சென்ற சுமார் 63 பேர் ஆலப்புழையில் ஏறிய படகு கவிழ்ந்து 2 பெண்களும், 2 பிள்ளைகளும் உயிரிழந்தார்கள். கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள புன்னமடா ஏரியில் காயல்குரிசடி என்ற படகு ஏறும் தளத்தில் இந்த விபத்து நடந்தது. படகு தளத்தை ஒட்டி நின்ற பழுதுள்ள படகில் ஏறி, அடுத்துள்ள படகுக்கு செல்ல முயன்ற போது பழுதுள்ள படகு கவிழ்ந்தது.
புன்னமடா ஏரியில் படகு ஏறும் தளங்கள் இருபது மட்டுமே இருப்பதாகவும், இவைகள் 40 படகுகள் மட்டுமே இயங்குவதற்குப் போதுமானது என்றும், மொத்தம் 50 தளங்களாவது வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சுமார் 4000 படகுகளில், படகு வீடுகளில் பெரும்பாலானவை தகுதிச் சான்று பெறவில்லை என்றும், தகுந்த கழிப்பறை மற்றும் சமையலறை இல்லையென்றும், நெருப்புப் பிடித்தால் 10 நிமிடங்களில் சாம்பலாகி விட நேருமென்றும் தெரிகிறது.
பெரும்பாலான படகுகள் கீழ்த்தளம் மட்டுமே வடிவமைக்கப்பட்டு பத்திரமாகச் செல்லக் கூடியது. ஆனால் படகு உரிமையாளர்கள் படகுக் கூரைக்கு மேல் ஓரத்தில் கம்பி வேலி போல அமைத்து, தற்காலிகக் கூரையும் அமைத்து, இடம் மாற்றக்கூடிய (Unfixed movable) பிளாஸ்டிக் சேர்கள் போட்டு அங்கேயும் ஆட்களை ஏற்றிக் கொள்கிறார்கள். இது வரம்பிற்கு மீறியது.
எனவே சுற்றுலா செல்பவர்கள் படகுத்துறைகளில் (நீச்சல் தெரிந்திருந்தாலும் கூட) கண்டிப்பாக ’உயிர்காப்புச் சட்டை’கள் கேட்டு வாங்கி அணிந்து செல்ல வேண்டும்.
ஒரே நேரத்தில் திபு திபுவென்று முண்டியடித்து படகுகளில் ஏறக்கூடாது.
படகுகளிலும் அனைவரும் காட்சிகளைக் காண்பதில் ஆர்வத்துடன் ஒரே பக்கத்தில் குவியக் கூடாது.
மேல் தளத்தில் சென்று, (குழந்தைகள் முக்கியமாக) போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சேர்களை அவரவர் விருப்பத்திற்கு அங்குமிங்கும் மாற்றிப் போடக் கூடாது.
பஸ், ரயிலில் நிற்பது, செல்வது போல அளவுக்கதிகமாக ஏறிச் செல்லக் கூடாது.
ஒவ்வொருவரின் உயிரும் விலை மதிக்க முடியாதது. எவ்வளவுதான் அரசு இழப்பீடு கொடுத்தாலும் ஒரு உயிருக்கு ஈடாகாது. தங்களைத் தாங்களே வருமுன் காத்துக் கொள்வது நல்லது.