சுவாசமே காதலாக...! தொகுப்பு - 3

எதுவுமே எழுதத் தோன்றாத ஒரு கல்லூரி விடுமுறை நாளில் உனக்கான கவிதை எழுத அமர்ந்த நொடியில் வற்றிப் போனது என் வார்த்தைகள் வளம். விரக்தியின் உச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களுக்கு நடுவே வார்த்தைகளை தேடித் தேடி அந்த அயற்சியில் உன்னைப்பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி எதுவும் கிடைக்காமல் வெறுமனே உன் நினைவோடேயே இருந்தது இன்னும் சுவாரஸ்யம் ஆகிப் போனது.

எப்படியேனும் உன்னை பார்த்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு ஒரு நாள் உன் வீடு இருக்கும் தெரு வழியே வந்தேன்.! நீ வெளியே வந்தால் என் பாக்கியம் என்று மனதுக்குள் கூட்டிக் கழித்துக்கொண்டு உன் வாசல் தாண்டும் முன் எதற்காகவோ நீ வெளியே வந்தாய், நான் எனக்காகவே நீ வெளியே வந்தாய் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

ஒப்பனை இல்லாத ஓவியத்தின் கற்றை முடியை ஒற்றை ரிப்பனுக்குள் கட்டி, ஒரு முழுப்பாவாடையும் ஆண்பிள்ளை சட்டையும், நெற்றியோர வியர்வையும் என்று மொத்தமாய் என்னை கொன்று போட்டுக் கொண்டிருந்த போது நீ சட்டென்று உன் முன் நெற்றியில் விழுந்த முடியை கலைத்து பின்னுக்கு தள்ளிய அந்த கணத்தில் மொத்தமாய் என் மனதும் கலைந்தது உனக்கும் உன் பின்னே நின்று கொண்டு உரிமையாய் உன் பாவாடை பிடித்து இழுத்து என் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கும் உன்னை பந்து விளையாட அழைத்துக் கொண்டிருந்த அந்த குட்டி வாண்டுவுக்கும் தெரியாது....

உன் அழகு ரொம்பவே அலட்சியமாய் என்னைப் பார்த்து சிரித்ததில் என் திமிர் மெளனமாய் பலமிழந்தது....

ஜென்ம ஜென்மங்களாய் தேக்கிவைத்திருந்த என் காதலை உன் காலடியில் வைத்து விட்டு மண்டியிட ஆசைப்பட்ட என் மனதை அடக்குவது; உனக்கான காதலை வெளிப்படுத்துவது என்ற இரு மிகப் பெரிய போராட்டத்துக்கும் இடையே...உன்னை மானசீகமாக எனக்குள் வாங்கிக் கொண்டு ஏக்கமாய் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு என் விழியிலிருந்து உன் விழிகளுக்குள் கடத்தினேனே ஒன்று...அதை மெளனமாய் விழுங்கி விட்டு...இப்போதோ அப்போதோ விழுந்து சிதறி விடுமோ என்ற ரீதியில் உதட்டின் ஓரத்துக்கு கொண்டு வந்து ஒதுக்கினாயே ஒரு புன்னகை அதில் ஒளிந்திருந்து ரசித்ததே அதுதானே.. நான் உன் விழிகளுக்குள் செலுத்திய காதல்...?

என்ன இந்தப் பக்கம்? என்று நீ அன்று கேட்டதை என் டைரியின் எல்லா பக்கத்திலும் நான் எழுதிவைத்ததும் உனக்குத் தெரியாது, உனக்கான ஒரு கடிதத்துக்கான போராட்டத்தின் முடிவில் என் வீட்டுக் குப்பைத்தொட்டி குறைபிரசவ கடிதங்களோடு நிறைந்து போனதும் உனக்குத் தெரியாது. வெட்கத்தில் நீ தலை குனிவது போல வார்த்தைளும் நானும் தோல்வியின் வெட்கத்தில் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தோம் வெற்றுச் சுவரை வெகு நேரமாய்.....!

முன்பெல்லாம் யாரங்கே என்று அதட்டினால் என் பேனாவிலிருந்து சட சடவென்று வந்து விழும் வார்த்தை வீரர்கள், கவிதையாகவும், கட்டுரையாகவும் நடத்திய அணிவகுப்புகள் ஏராளம். காதலால் நீ ஆக்கிரமித்த பின்பு சரணாகதியாய் உன்னிடம் தஞ்சம் அடைந்து விட்டு இப்போதெல்லாம் வெறுமையை மட்டுமே கக்குகிறது என் பேனா...

உனக்கு நினைவிருக்கிறதா? என்னை முதன் முதலாய் நீ உற்று நோக்கிய அந்த நாளை? அதற்கு அடுத்து மூன்று நாள் நீ கல்லூரிக்கு வராத காரணம் அறியாமல் நான் காதலோடு உன் வகுப்பறையையே சுற்றி சுற்றி வந்தேன்.....ஏதேதோ பேசினேன்.....யார் யாரிடமோ விசாரித்தேன்... நீ எங்கே என்று!

எதார்த்தமாய் நீ வராமல் இருந்திருக்கிறாய் ஆனால் அதை எனக்கான ஏமாற்றமாய் மாற்றிப்போட்டது காலம். மறக்கமுடியாத அந்த தினத்தின் உணர்வுகளை ஒரு பேப்பரில் அடைத்து என் டைரிக்குள் பூட்டி வைத்து இன்னமும் நேசிக்கிறேன் அந்த வரிகளை என் செல்லப் பிராணி போல...

"கிடைக்காமலேயே இருப்பதுதான்
தேடும் பொருளுக்கான சுவாரஸ்யம்...
உன்னை தவறவிடும் நேரங்களில்...
எல்லாம் தவறாமல் நெஞ்சு நிறைத்திருக்கிறாய்...!
உனக்கான காத்திருப்புகளின் அவஸ்தைகளில்
ஜனித்தித்திருந்த குழந்தைகளுக்கு
கவிதையென்று பெயரிட்டு..
கையோடு ஏந்தி காத்திருக்கிறேன்....
என் காதலைச் சொல்ல...."

பூட்டி பூட்டி வைத்திருக்கிறேன் திறக்க முடியா பிரபஞ்ச ரகசியம் போல ஓராயிரம் விசயங்களை எனக்குள்ளே...! உன்னிடம் சொல்லி நிறைத்ததை விட சொல்லாமல் நான் ஒளித்து வைத்திருக்கும் காதல் இன்னும் பிரமாண்டமானது....

கிறுக்கல்களாய் தொடர்கிறது இன்னும் நம் கல்லூரி விடுமுறை....உனக்கான காத்திருப்பாய்.....!

இது தொடரல்ல...ஆனால் தொடரும்....ஆமாம்..என்னின் கடைசி நொடி வரை காதல் என்னுள் எப்போதும் இருக்கும்...எப்போதும் இருப்பது தொடர் ஆகாது.....அல்லவா?


(இன்னும் சுவாசிப்போம்...)

எழுதியவர் : Dheva.S (9-Feb-13, 11:10 am)
பார்வை : 104

மேலே