azhagin aathicchoodi

அழகு என்பது எது?
அதற்கு விடை ஏது?
அசைந்தாடும் மயில் அழகு
அளவே இல்லாமல் பாயும் அலை அழகு
ஆவாரம் பூ அழகு
ஆலையத்தின் கோபுரமழகு
இசைப்பாடும் குயில் அழகு
இளம் பிள்ளை கண்களும் அழகு
ஈன்றெடுத்த தாயின் முகம் அழகு
ஈரமுள்ள மனம் அழகு
உன்னதமான நட்பு அழகு
உற்சாகமான சிரிப்பழகு
ஊர்ந்து போகும் நத்தை அழகு
ஊஞ்சல் ஆட்டம் அழகு
எட்டி உதைக்கும் பிஞ்சுக்கால்கள் அழகு
எழிலாக ஏரியில் நீந்தும் மீனுமழகு
ஏற்றத்தாழ்வில்லா மனப்பான்மை அழகு
ஏறு உழும் எருதும் அழகு
ஐந்தறிவுள்ள மிருகமும் அழகு
ஐயம் இல்லா தன்மை அழகு
ஒற்றுமையாக வாழ்வதழகு
ஒய்யாரமான அன்ன நடை அழகு
ஓடும் நதியின் ஓசை அழகு
ஓங்கார நாதம் பேரழகு
ஔவை பாட்டியின் தத்துவமும் அழகு
ஔடதங்களின் குணம் அழகு
ஃ எனும் தமிழுக்கே உரிய எழுத்து அழகு
அஃதே என்று முடியும் ஆத்திச்சூடியும் அழகு
கல்லூரி மாணவர் கல கலப்பும் அழகு
கள்ளமில்லா உள்ளம் அழகு
சலனமில்லா குளமும் அழகு
சலங்கை ஓசை கேட்க அழகு
டப்பாங்குத்தும் மிக அழகு
டபரா டம்ப்ளர் காபி அழகு
தத்தை மொழி கிளி அழகு
தரையில் அமர்ந்து உண்ணுவதழகு
பச்சைக்குழந்தையின் அழுகை அழகு
பச்சைப்பசேலன்ற பயிருமழகு
அறம் செய்தல் அனைத்திலும் அழகு
பிறரை வருத்தாமலிருப்பது அழகு
ஞானம், பக்தி பேரழகு,
ஞாயிறு ஒளி காண அழகு
வெங்கலப்பாத்திரம் அழகு
தேங்காய் மரத்தின் பயனும் அழகு
மணமுள்ள மலருமழகு
பெண் கோபமும் கூட அழகு
நல்ல சிந்தனை நமக்கு அழகு
நான்மறை வேதங்களின் சொல் கடைப்பிடிப்பதழகு
மனிதப்பிறவி மிக அழகு
மாங்காய் ஊறுகாய் புளிப்பு அழகு
வானவில்லின் வண்ண்ங்களுமழகு
பானைச்சோற்றின் ருசியுமழகு
யதுகை மோனை தமிழுக்கு அழகு
யானை பலம் பேரழகு
ரயில் ஓடும் சத்தம் அழகு
ராக மாலிகை ராகம் அழகு
லயத்தோடு போடும் தாளமழகு
லேசாக வீசும் காற்றும் அழகு
வம்பு பேசாத வாயுமழகு
வாழ்த்து கூறும் நாவும் அழகு
மழைத்துளியின் குளிர்ச்சி அழகு
வாழைப்பூ வெகு அழகு
களை எடுக்கும் காட்சி அழகு
புள் இனஙகள் பேரழகு
அழகை வர்ணித்துக்கொண்டிருப்பதழகு
அனைவரும் மகிழ்வாக இருப்பதழகு

தாமரைச்செல்வி (புனைப்பெயர்)
பத்மா பரத்வாஜ்


எழுதியவர் : Taamaraiccheilvi (13-Nov-10, 11:53 am)
சேர்த்தது : Padma Bharadwaj
பார்வை : 357

மேலே