காதலன் கள்ளக் காதலனாய்

கால் நூற்றாண்டிற்கும் மேலாய்....
அவனுடனான காதல்....
அலுத்துப் போகாமல்
சற்றும் காதல் குறையாமல்...
 
திருமணத்திற்கு  பின்னும்
தொடர்கிறேன்....
அவனுடனான காதலை
கைபிடித்தவன் அறிய....
 
அலுவகத்தில் அறிமுகமானவன்
முதலில் குழம்பிப் போனேன்
அவனைப் புரிந்து கொள்ள...
பழகப் பழக
பரிச்சயமாகிப் போனான்..
அவன் அசைவுகளை
புரிந்து கொண்டவளாய் நான்...
அவனை விட்டுப் பிரியாதவளாய்..
 
அடிமையானேன் அவனிடத்தில்
அவன் ஸ்பரிசம் இல்லா நாளில்லை
இல்லத்திலும் சங்கமிக்கிறேன்
நான் அவனோடு...
 
அவனுடனான சங்கமத்தில்
நான் மயங்கி... மயங்கி...
அனைத்தும் மறந்து... மறந்து...
சுய நினைவுகள் இழந்து...
 
"உன் காதலை
அலுவலகத்தோடு நிறுத்திக்கொள்
வீட்டினில் தொடர்ந்தால்
விளைவுகள் விபரீதமாகும்"
 
கணவனின் எச்சரிக்கையை
புறக்கணிக்கிறேன்...
கால் நூற்றாண்டு காதலை
கைவிட முடியாமல்...
 
மயங்கிய நிலையில்
மருத்துவமனையில் நான்
கணினிக் காதலனின் சங்கமத்தில்
கழுத்தெலும்பு தேய்மானங்கள்...
 
தேய்ந்த எலும்புகளின்
அழுத்தத்தில்
என் மூளை வழி நரம்புகள்
என்னை மயக்கத்தில் ஆழ்த்தி...
 
கவனமாய் பார்த்துக் கொள்கிறார்கள்
காதலனை நான் தொடாது...
இருந்தும் கள்ளத் தொடர்பு கொள்கிறேன்
நடுநிசி வேளையில்...
 
என்னுயிரே... என் மின்னுயிரே...
காதலனைக் கொஞ்சிக் குலவுகிறேன்
விளைவினில்  ஈனுகிறேன்
சுகப் பிரசவமாய் இக்கவிதையை...
விழிகள் இருட்டிக்கும் வலியில்...
 இந்த வலியும் சுகமானதாய்...
 

எழுதியவர் : சொ. சாந்தி (13-Feb-13, 5:13 pm)
பார்வை : 217

மேலே