என் தாய்

1976.
ஆகஸ்ட் திங்கள்
2-ம் நாள்,
மன நிறைவோடு ஓர் மகனை
பெற்றெடுத்தாள் என் தாய்!
அத்தனை கஷ்டங்களும்
துயரங்களும் கடந்து,
280 நாட்கள் தவம் செய்து,
பெற்றெடுத்தாள் என்னை
ஓர் குழந்தையாக...!
ஆண் என்றும், பெண் என்றும்
வேற்றுமை பாராட்டா தாயுள்ளம்,
எதுவாகிலும் ஏற்றுக் கொள்ளும் பேருள்ளம் !
எனை பெற்றெடுத்த தாயவள்
தன் உடல் வருத்தி,
உருக்குலைத்து
சுயநலமின்றி
தன் அன்பால்
உற்பத்தி செய்த "தாய்ப்பால்"
கொடுத்தென்னை
கண்ணும் கருத்துமாய் காத்து வளர்த்தாள்!
தினசரி கடைக்கு,
தாயின் கரம் பிடித்து பின் செல்வேன்,
ஆரஞ்சு மிட்டாய் வாங்க...
என் குழந்தைப் பருவ
ஆசைகள் அனைத்தும்
உணர்ந்து கொடுத்தாள்
ஒரு குறையுமின்றி!
பள்ளிப் பருவமதில்,
சீருடை அணிவித்தென்னை
போய் வா மகனே என்றனுப்பிய
என் தாய் முகம், நான் மறவேன்!
கல்வி கசந்தாலும்
என் தாய் முகம்
எனைக் காத்தது, கற்பித்தது!
கல்லூரி வாழ்க்கைக் கூட
கற்கண்டாய் இனித்தது!
தாயன்பு ஒன்றே
அத்தனைக்கும் மேற்கோளாய் நின்றது!
கல் தடுக்கி விழுந்தவன் தலை
தரை தொடும் முன்
தாயவள் கரம் தாங்கும் என் தலையை!
என் தலை வலி
நான் உணரும் முன்பே
தாயவள் கரம் வருடும்
என் தலையை!
உடல் சோர்ந்து, உள்ளமும் சோர்ந்து
உருக்குலைந்து போன
என் தலைமுடி கோரி,
என்னடா மகனே என்று
நெஞ்சோடு எனை அணைத்து,
மேல் நெற்றியில்
சத்தமின்றி முத்தமொன்று கொடுத்தாள்,
வேண்டா அத்தனையும்
பறந்து போயிற்று எனை விட்டு!
சரிவிகித உணவில் கிட்டாத உத்வேகம்
நிறைந்தது என்னுள் - என்
அன்னை தந்த முத்தத்தால்!
எந்த இன்பத்திலும் துன்பத்திலும்
என் அன்னையவள் சிந்தனை முழுக்க
நான் நிறைந்திருக்க...
தாயின் அரவணைப்பு ஒன்றே
என்னை வளர்த்தெடுக்க,
உருவானேன் நல் ஆசிரியனாக...!
உடலும், நல் உள்ளமும்
தந்த தாயவள்
நான் இல்லம் வருகையில்,
இயல்பாய் படுத்திருந்தாள்...
அத்தனை துயரங்களையும் தன்னுள் அடக்கி,
அழகான முகத்தில் சிரிப்பைக் காட்டி
வரவேற்றாள் என்னை மகிழ்வோடு!
சிறு குழந்தை போல் எனக்காக
ஓடியாடி திரிந்தவள்,
ஓய்ந்து படுத்திருந்தாள்!
உள்ளம் முதல் முறையாக வலித்தது,
இறைவனைப் பழித்தது!
இறுதியாக...
என்னை ஈன்ற என் அன்னையின்
உயிர் காக்க முடியா
முடவன் ஆனேன்!
அன்று...
ஆஸ்பத்திரி படுக்கையில்
படுத்திருந்தாள் என் தாய்
கண்மூடி...
உடல் உயிரைக் காக்க போராடியது!
மெல்ல அருகே சென்றேன்.
அவள் கண்ணில் பார்வை இல்லை!
ஆனாலும், தாயுள்ளம் என் வருகை அறிந்தது!
மூடிய இரு விழி ஓரமும்
கண்ணீர் வழிந்தோடியது!
படுக்கையை நனைத்த
என் தாயின் கண்ணீர் வரைந்த ஓவியம்
"மகனே , உன் தலை முடி கோரி
நெஞ்சோடு அணைத்து
மேல் நெற்றியில் முத்தமிட
நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை!
தாயுள்ளம் கொண்ட ஓர் பெண்ணை
திருமணம் செய்துகொள்,
நீ வேண்டும் அன்பை
அவள் மூலம் பெற்றுக் கொள்" - என்றது!
கண்களில் நீர் வழிய,
அன்னை முகம் நோக்கினேன்...
அவளின் விழியோரம் காய்ந்து போயிற்று !
இறுதியாக என் தாய் விட்ட கண்ணீர்க் கூட
தனக்காக அல்ல, எனக்காக...!!!

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (15-Feb-13, 8:58 pm)
Tanglish : en thaay
பார்வை : 179

மேலே