பேசவேண்டும். . .
பேசவேண்டும் - இனி
தமிழர்கள் பேச வேண்டும்
தாய் மொழியாம் நந் தமிழதனில்
தமிழர் ஒன்றுபட பேசவேண்டும்
பேச்சுரிமை கண்ட பாரதத்தில்
பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்-இன்று
தமிழர் படும் அவதிகள் கண்டு
பேசா மெளனம் காப்பது ஏன் ?
உலகம் முழுதும் தமிழர் நிலைதனைக் கண்டும்
தமிழர் பலர் தம்இன்னுயிர் ஈந்தும்
தமிழர் பலர் ஆட்சியிலிருந்தும்
தன்னலமறுத்து பேசாதது ஏன்?
தமிழா தமிழா என்றவரெல்லாம்
தமிழர் நலம் பேணாததுமேன் ?
தமிழே பேச்சாம் தமிழேதம் மூச்சாம்
என்றவரெல்லாம் பேசாமடந்தை ஆனதுமேன்?
அகத்தியன் தந்த காவிரியதனில்
அணை எழுப்பி தடுப்பதுமேன்?
அணைகட்டிய கரிகாற்சோழன் - வம்சம்
இன்று அணைகளால் பரிதவிப்பதுமேன் ?
இவைகளைப் போன்றதோர் பலகேள்வி
எம்மை உலுக்கிப் பார்த்ததுவே
இவைகளுக்கோர் விடைகாண்பதென்றால்
பேசிடவேண்டும் தமிழருமே !
தமிழர்கள் பேசவேண்டும் !
மனம் திறந்து பேசவேண்டும்
மக்கள் நலம் பேண பேச வேண்டும்
மனித மனம் மாற பேச வேண்டும்
நாடு தோறும் பேச வேண்டும்
நாடறிய பேச வேண்டும்
நல்ல தமிழில் பேச வேண்டும்
நம் குலம், காத்திட பேச வேண்டும்
தயக்கமின்றி பேசவேண்டும்
தடைகள் இன்றி பேசவேண்டும்
தன்னலம் மறந்து பேச வேண்டும்
தாயகம் காத்திட பேச வேண்டும்
பொதுநலத்தோடு பேச வேண்டும்
சுயநலமறுத்து பேச வேண்டும்
முடியாட்சி கொண்ட நம்மிடத்தே
நற் குடியாட்சி மலர்ந்திட பேச வேண்டும்.
உலக அரங்கினில் பேசவேண்டும்
உண்மைதனை உரக்க பேசவேண்டும்
உலகோர் யாவரும் உணரும் வண்ணம்
உண்மைநிலைதனைப் பேசவேண்டும்
இன்று சுழியிடும் இப்பேச்சு
இனியேழ் தலைமுறைக்கும்
உரைக்கக் கேட்டு
இனிதமிழ் மொழியாம்
பேசிடுவோர்தம் - இன்னல்
களைந்திட பேசவேண்டும்
பழம் பெரு கதைகள்
இனி பேசோம்
பண்டய தமிழினை இனி உரைப்போம்
புதிதாய் இனி தமிழர்தம் மனதில்
புதுமைகள் பல படைத்திடுவோம்
பழைய சாத்திரம் கலைந்திடுவோம்
புதிய சரித்திரம் படைத்திடுவோம்
எங்கும் தமிழ் எதிழும் தமிழ்
என்று உலகோர் போற்ற வாழ்ந்திடுவோம்.