நீ...!

தெருவெல்லாம்
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!
காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...!
காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற
பிம்பங்களால் இதோ
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!
உன்னைப் பற்றிய
நினைவுகளோடும் செரிக்க முடியா
ஆசைகளோடும் இறுக்கத்தில்
மூடிக் கிடக்கிறது
தீர்மானித்தல்களில்
தோற்றுப் போன மனது....!
ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!
ஒரு கோப்பை தேநீரும்
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த
கவிதைகளும், சொல்லாமல்
சொல்லிக் கொண்டிருந்தன
உன் மீதான என் காதலை...!
என் பெயர் சொல்லி
நீ அழைத்த தருணங்களும்
என் முகம் பார்த்து நீ
மறைத்த வெட்கங்களும்
காற்றில் பறந்த உன் கூந்தலை
ஒதுக்கிவிட்டு நீ பார்த்த பார்வையும்
குவித்துப் போட்டிருக்கின்றன்
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!
படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!
பிரிவோம் என்று தெரிந்தே
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!
உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து
இந்தக் கணம் வரை
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!