சித்திரம் பேசுதடி
எதிர்பார்க்காத நேரத்தில் வருவதில் மழை கில்லாடி.. சில போது கனவுகளோடு வரும், சில போது கனவுகளை கலைத்த படி வரும்.. அன்றுஅப்படிதான் வந்தது.... பேருந்துக்காக காத்திருக்கும் முகில்க்கு அது எப்படி இருந்ததோ....
அவனேசொல்வான்..
ஒருவர்சொல்லும் போது மழை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் சில்லையும் சேர்த்து கொள்கிறது இல்லையா.....
அலுவலக வேலையை முடித்து கொண்டு இரவு பத்து தாண்டிய மணித்துளியில்தான் கோவைக்கான கிளம்பளுடன் பேருந்து நிலையம் நோக்கி வந்தேன்... ஏனோ அத்தனை கூட்டம்... மெல்ல ஆரம்பித்த மழை , மெள்ள தொடங்கியது....சில்லென்ற மழை சிலிர்க்க ஆரம்பித்திருந்தது.......முகம் துடைத்தபடி பேருந்துகள் வருவதும் மக்களை அள்ளிக்கொண்டு செல்வதும், அந்த காட்சி பொம்மை பேருந்துகளில் தொற்றிக்கொண்டிருக்கும் எறும்புகள் போல இருந்தது.....தலையில் தண்ணீர் படாத மாதிரி ஒரு சுவரோரம் ஒளிந்து நின்று கொண்டிருந்தேன்..
இந்த மழை கனவை கலைக்க வந்த மழை மாதிரி தெரியவில்லை..கனவை கண்டும் காணாமல் போகும் ஒரு பயண சாலையில் குலுங்கும் மஞ்சள் நிற பூக்கள் போல வந்து கொண்டிருந்தது ....
மழை வந்தா சில நேரத்துல பஸ் ஸ்டாண்ட்குள்ள த்ரூவா போற பஸ் வராதுங்க...எதுக்கும் வெளிய ரோட்ல போய் நின்னு பாருங்க என்ற பெட்டிகடைக்காரரின் அறிவுரைக்கிணங்க வெளியே சென்று நின்று கொண்டேன்...ஆம் பெங்களூரில் இருந்து பொள்ளாச்சி போகும் பேருந்து வந்து கொண்டிருந்தது...மழையோடு..
கை காட்டினேன், என்னோடு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள்..
கதவில் தலையை நீட்டிய நடத்துனர், ஒரே ஒரு சீட் இருக்கு என்றார். . என்னோடு நின்றவர்கள் குடும்பமாகவோ, நண்பர்களாகவோ இருந்ததால், அனைவரும் பின் வாங்க, சட்டென நான் முன் வாங்கினேன்.. அப்போது நனைத்த மழை இதமான மடியின் சூட்டு மழையாக உணரப்பட்டது... பேருந்தின் சூடும், வாசனையும், ஒரு வித கதகதப்பை ஒரு வித ஆசுவாசத்தை எனக்குள் நிரப்பியது...
கண்கள் தேட தேட நடத்துனர் கைகாட்ட கைகாட்ட அப்படியே நடந்து நடந்து கடைசியில், அதற்கு முன்னாள் உள்ள சீட்டில் ஜன்னல் பக்கம் அல்லாத இந்த பக்க ஓரத்தில் அமர்ந்தேன்.. முன்னே, பின்னே, அருகே தொலைவில் ஆங்காங்கே எல்லாருமே தூங்கி கொண்டிருந்தார்கள்...வெளியே மழை, உள்ள பேருந்தின் ஆடல், தாலாட்டு போல வண்டியின் ஓட்டம், இழுத்தடைத்த ஜன்னல், சிகப்பு லைட்டின் புன்னகை, தூக்கம் வராத என்ன....?
அருகிலிருந்தவரை, உடலாலேயே அசைத்து அசைத்து அவரின் இருக்கைக்கான அளவில் சரியாக அமர்த்தினேன்..மனம் என்னவோ போல் எதையோ இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்தது... மெல்ல இடபக்கம் தலையை எட்டி பார்த்தேன்.. வைபர் கண்ணாடியின் முகத்தை துடைத்துக்கொண்டே இருந்தது... முன் லைட்டின் வெளிச்சம் சாரலின் ஊடே புகுந்து சாலையை சோதனை செய்தபடியே முன் சென்றது.. வெளிச்சத்தில் விழும் துளிகளில் வைரம் அறுக்கபடுகின்றனவோ.... தலையை இழுத்துக்கொண்டேன், சட்டென இடது பக்க சீட்டில் இடது காலை முன்னால் இருக்கும் சீட்டில் மடக்கி முட்டுக்கொடுத்து, ஒரு பக்க மார்பை பக்கத்திலிருந்தவன் மேல் படர விட்டு என்னை பார்த்தது போல் முகத்தை வைத்து தூங்கி கொண்டிருந்தாள்.. அவள் ....
அவளை தாண்டிய கண்களில், அவள் அருகே அமர்ந்திருக்கும் அவன், அப்படியே அடுத்த சீட் , முன்னால், பின்னால், அட ,அப்போது தான் நன்றாக கவனித்தேன், அனேகமாக அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. ஆம், அவர்கள் வட மாநிலத்தை சார்ந்தவர்கள்.. ரோட்டோரங்களில் மண் சிலை செய்யும் கூட்டத்தை சார்ந்தவர்கள் என்றே தோன்றியது ... அந்த சிவப்பு லைட் வெளிச்சத்தில் இன்னும் பள பளத்தது அவளின் முகம்.. மூக்குத்தியும் பாவாடை சட்டையும் ஜிமிக்கியும் அவளை சித்திரம் என்றே எண்ண வைத்தது, ஒரு அழகிய கற்பனை... அவன் யார் அவளருகில், கணவனா காதலனா மாமனா அண்ணனா அப்பாவா ம்ஹும் , அந்த ஆளின் உருவத்தில், முகத்தில் இப்படி எதை வைத்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை ..அவனை தாண்டிய ஒரு எல்லையில் மிதக்கும் ஒரு சிறகாக, ஒரு இறகாக அவள் தெரிந்தாள்...கூரான நாசியில் பச்சைக்கல் மூக்குத்தி.. கண்டிப்பாக பெரிய விழிகளாகத்தான் இருக்கும் , மூடியிருக்கும் இரு முட்டைகள் போல் இருந்தது......
அந்த சிவப்பு லைட் வெளிச்சத்தில் இன்னும் பள பளத்தது அவளின் முகம்.. மூக்குத்தியும் பாவாடை சட்டையும் ஜிமிக்கியும் அவளை சித்திரம் என்றே எண்ண வைத்தது, ஒரு அழகிய கற்பனை... அவன் யார் அவளருகில், கணவனா காதலனா மாமனா அண்ணனா அப்பாவா ம்ஹும் , அந்த ஆளின் உருவத்தில், முகத்தில் இப்படி எதை வைத்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை ..அவனை தாண்டிய ஒரு எல்லையில் மிதக்கும் ஒரு சிறகாக, ஒரு இறகாக அவள் தெரிந்தாள்...கூரான நாசியில் பச்சைக்கல் மூக்குத்தி.. கண்டிப்பாக பெரிய விழிகளாகத்தான் இருக்கும் , மூடியிருக்கும் இரு முட்டைகள் போல் இருந்தது......
நடத்துனர் வந்தார், நின்றார், பணம் வாங்கினார், டிக்கெட் கொடுத்தார்...திரும்ப அவருக்கான இடம் நோக்கி போய் விட்டார்...அவரின் சலசலப்பு அத்தனை பெரியதாக இல்லை .. அனாலும் அவள் விழித்துக்கொண்டாள் போல, திக் என்றது எனக்கு....அவள் தூங்கி கொண்டு தானே இருக்கிறாள் என்று நான் தொடர்ந்து மெய் மறந்து பார்த்துக்கொண்டிருக்க, அவள் எப்போது விழித்தாள் என்று தெரியவில்லை... இருட்டு விலக விலக அல்லது பழக பழக இருட்டுக்குள்ளிருந்து ஒருவர் நம்மை பார்ப்பது எத்தனை படபடப்புக்கானது... அப்படி இருந்தது அவளின் பார்வை...
சட்டென திரும்பி கொண்டேன் எவ்ளோ பெரிய கண்ணு.. பேய் பாககற மாதிரி பாக்கறா.. உள்மனம் திக் திக் என்றது... மறந்தும் அந்த பக்கம் திரும்ப கூடாது என்பதில் கவனம் கலைந்தேன்.... அனிச்சை செயலாய் மெல்ல திரும்பினேன்... அவள் இதற்காகவே காத்திருந்தவள் போல என்னையே பார்த்து கொண்டிருந்தாள். அதே விழி.. கொஞ்சம் சேர்ந்த உளியும்......நான் எதேச்சையாக அவளை, அவர்களை, அப்படியே கடந்து முன்னால் கண்ணாடி கடந்த சாலை..... என கடந்து குனிந்து வலப்பக்கம் ஜன்னல் பார்த்து, சற்று கண் மூடி மீண்டும் மெல்ல அவளைப்பார்க்க, எதிரே வந்து கடந்து போன வாகனத்தின் லைட் வெளிச்சம் கணங்களில் அவள் முகம் கடக்க அப்பப்பா .. அது, யாதுமறியாமல் , யாவருமறியாமல் பூத்துக் கொண்ட ஒரு பூவின் முதல் பார்வையென அவளின் முகத்தில் ஒரு மலரல்...
முன் சீட்டில் இடக்கன்னம் பதிய கொட்ட கொட்ட விழிக்கும் கண்களில் என்னை பழக்கியிருந்தாள் ... எனக்கும் கூட கொஞ்சம் பயம் விட்டிருந்தது... பழகி விட்ட மழையை போல்...உள்ளாடை நனைத்த மழை, இன்னும் ஆழமாக பழகி விடுமே.... அப்படி....நானும் இடது கன்னம் முன் சீட்டில் பதிய அவளை இமை கொட்டாமல் பார்த்தேன்.... அவளருகே ஜன்னலோரம் அமர்ந்திருந்த அவளின் ..................................... நன்றாக ஜன்னலை பார்த்தபடி தூங்கி கொண்டிருந்தான் .. மழை ஆசீர்வதித்த தூக்கம் அவனுக்கு.. மழை ஆசீர்வதித்த மயக்கம் எனக்கு.....மனம் மிருதுவாகிக் கொண்டிருந்தது..... மழையில் கப்பல் விட்ட தருணங்கள் சரசரவென வந்து போனது .... திறந்து கிடந்த காட்டுக்குள் ரீங்கரிக்கும் பட்டாம் பூச்சியை விரட்டி செல்லும் தென்றல் என ஒரு நினைப்பு .... பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது......
தேவையை தொடரும் மனித மனம் இயல்புதானே....பார்வை தந்த தைரியம் மெல்ல சிரிக்க சொன்னது... எந்த குழந்தை காணும் போதும், ஒரு கணம் ஏதாவது ஒரு முக பாவத்தில் ஒரு சிரிப்பு சிரிப்போமே.....அப்படி... அட, அவளும் அப்படியே செய்தாள் .. கிளிபிள்ளை....பல்லவன் செய்த சித்திரம் என்று மனம் சொல்லி பார்த்தது....மேலும் ஒரு முறை உதடு குவித்து மெல்ல புன்னகைத்தாள் .... அரும்பிய மெல்லிய இதழ் மேலுற்ற முடியில் சிறு நாட்டியமே நடந்தது....அழகியல் அவளானாள் ... ஆழ் மனதில் அனல் நடித்தது......கூடவே பெரும் மழை அடித்தது.....என்னெல்லாம் கேக்கலாம், எப்பவும் போல், பேர் ஊர் படிப்பு வயசு பிடித்த நடிகர், பிடித்த படம், போன் நம்பர், இன்னும் என்னெல்லாம் ,,ம்ஹும் எதுவுமே கேட்க முடியாது.... ஒரு கணம் ரீவைண்ட் பண்ணி பார்த்தேன் .. அவள் வலது புருவத்தை மெல்ல தூக்கி என்ன என்பது போல் கேட்டதை இப்போது உணர்ந்தேன்.... இரு கைகளாலும் தலை முடியை அழுந்த கோதினேன்.. யாரிடம் பகிர இவளின் நினைவுகளை .....
உன் பேர் என்ன..... மெல்ல இதழ் விரித்து மெல்லிய மௌனத்தால் கேட்டேன்...ஆணே இப்படி என்றால், புரிவதில் பெண் எப்படி இருப் பாள் ... இதழ் குவித்து ஏதோ சொன்னாள்....திடும் மென வந்த மழை உணர நேரம் பிடிக்கும் அல்லவா...அப்படி இருந்தது, அவளின் பதில்....
ம்ஹும்
புரியவில்லை என்றேன் ...
உற்று நோக்கியவள் , கழுத்தில் கிடந்த மணியை மெல்ல மேல் எழுப்பி ஆட்டினாள் சத்தம் வரவில்லை .. சங்கதி வந்தது....
மணி ...
வெறும் மணி அல்ல ... கண்டிப்பாக மணிமேகலை.....
ஜாடையில் ஊருக்கு ராஜாவானாள் ... ஒ ..... ராஜஸ்தான் ... இப்பொது போவது பொள்ளாச்சி என்பது, நானே யூகித்து கொண்டது....அடுத்து என்ன ..?
என் பெயர் சொன்னேன்,
ம்ஹும் ... அவளுக்கு புரியவே இல்லை.....சிரித்தால்.. எனக்கென்னவோ அதுவே அழகான அர்த்தம் போலத்தான் தோன்றியது........வயசு கேட்டேன் .... அவளின் இடது காலை வலது கால் மேல் போட்டாள் ... வெள்ளி கொலுசு கணுக்காலை கிள்ளி கிடந்தது.....விரல்களால் அள்ளிக்கொண்டவள் அதிலிருந்த கண்ணிகளை எண்ணினாள் .....
முடிந்தது 21 ல்....
அப்பப்பபா ......எத்தனை நுணுக்கம்....கண்களில் கண்ணி கொண்ட கன்னிக்கு... கல்யாணம் ஆகி விட்டதா....வேண்டாம், கேட்கவே வேண்டாம்..அந்த பதிலில் மழை நிற்க சாத்தியம் உண்டு..இந்த மழை இந்த பயணம் முழுக்க இருக்கட்டும். மரணம் ஏன் யாருக்கும் பிடிப்பதில்லை....பிடித்தவர் எவருமே உடன் வருவதில்லை, ஒருவேளை வந்தால் பிடிக்குமோ என்னவோ ! அப்படித்தான் பிடித்தார் உடன் இருக்கையில் எல்லாமே சரி ஆகிறது, தவறு உட்பட.... அவளின் பார்வை சரிக்கும் தவறுக்கும் மாட்டிக்கொள்ளாத, குடம் கொள்ளாத ஒரு மழை. அது வரும் வரை வரட்டும், நிற்கையில் திட்டாத வானத்தை திகட்ட காண்போம் என்பதில் ஒரு சுய முன்னேற்பாடும், சுய தேற்றலும் இருப்பதை ஓட்டுனர் அடித்த ஹாரனில் ஊர்ஜித படுத்தினார்...
கண்களை மூடிக் காட்டி, தூங்கலையா என்றாள் ..
கண்களை திறந்து காட்டி, இல்லை என்றேன்...
ஏன் என்றாள் கழுத்தை தூக்கி...
தூங்கினால் உன்னை பார்க்க முடியாதே என்றேன்...
தீர்க்கமாக பார்த்தவள், என்னை ஏன் பாக்கணும் என்றாள் ...
காண தடுமாற்றம்..... பின் சுதாரித்துக்கொண்டேன் , அப்போ தான் மழை வரும் என்றேன்...
அவள் புரியவில்லை என்றாள் ..
மழை அப்படிதான் என்றேன்..
அவள் ஏதோ கொடுத்தாள் , மெல்ல சுற்றி ஒரு பார்வை பார்த்தபடியே வாங்கினேன்...செம்பால் ஆனா புத்தர் சிலை , அதுவும் புத்தர் சிரிப்பது போன்ற சிலை.....வாங்கி பார்த்தேன், அவளே சொன்னாள் , அவளே செய்தது என்று.....என்ன கற்பனை , இதுவரை புத்தரை சிரித்தது போல நான் எங்குமே கண்டதில்லை...எப்படித் தோன்றியது இவளுக்கு இத்தனை ஒரு கற்பனை ..ஏன் சிரித்தார் புத்தர்...
உன் மழை மாதிரி தான் என்றாள் என்றே நான் சிந்தித்து கொண்டேன்..... ஒட்டு மொத்த அழகும் அவளிடம் ஒரு மழையென துள்ளிக் கொண்டிருந்தது .. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே தூங்கி போனான்....
விழித்தவன் பழித்தான் எல்லாவற்றையும்.....கோவை என்பதை ஊர்ஜிதப்படுத்தியவனுக்கு எல்லாமே கனவாய் இருந்தது.....அருகினில் அவள் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது... ஒரு வேலை எல்லாமே கனவோ, அல்லது கற்பனையோ அல்லது நிஜம் தானோ....அவனுக்குள் ஓய்ந்திருந்தது.....அழகிய பெரு மழை. வானம் முகம் கழுவி பளிச்சென்றிருந்தது.... சட்டென நிற்கும் மழை எதையோ கிளறி விடுகிறது, அழகியல் தத்துவம் விளங்கவில்லை.... ஆம் தூங்கியதை நொந்து கொண்டான்...அவள் போய் விட்டாள், அழகான பயணத்தை யாரும் அறியாமல் இணுங்கி கொண்டு போய் விட்டாள்...
தன்னை விடுவித்து கொண்ட இலையென அவள் போயே விட்டாள், கனவுகளை தரவே இல்லை, கனவாக கலைந்த அவள் காலம் முழுவதுக்குமான மழையை தந்து விட்டு கரைந்து விட்டாள் ... காகித கப்பல் கவிழ்ந்து கிடக்கிறது அவன் வாசலெங்கும்.... இன்னதென அறியாத ஏக்கத்துடன் ஒரு கனவை தொலைத்தவனாய் கடந்து போக ஆரம்பித்தான்...
பேருந்தில் இருக்கையின் அடியே ஆடாமல் அமர்ந்திருந்தார்....
அவள் தந்த அந்த புத்தர்......