தனிமைக்கவியும் மௌன மொழி
நிலவு உடைந்து
நிரம்பி வழியும்
முற்றக்கோப்பை...
நீரழகி நடம்புரியும்
நதிமேடை...
அலை மழலை நிதமாடும்
கடலூஞ்சல்...
வானத்தை வரைய
வளர்ந்து நிற்கும்
ஆலம் தூரிகை...
நள்ளிரவு ஆகாயத்தை
சில்லென்று
நம்மருகில் நிறுத்தும்
மொட்டைமாடி பறக்கும்தட்டு.
இவையாவும் எம்
தனிமைத் தவக்களங்கள்.
தனிமை!
என்
இறுக்க ஆடையைக் களையும்
மர்மக் கரம்.
கவலைக் கதவின்
தாழ்திறக்கும்
செஞ்சாவி...
என் எப்போதுமான
தனிமைத்தவத்தில்
உயிர்வேர்வரை
ஊடுருவிப் பாயும்
காட்சிக் களங்களே!
உங்களுக்கும் எனக்குமான
உரையாடலின் மொழி
மௌனம்தானே!
நம் இருவருக்குமான
பேச்சுவார்த்தை
நிறைவுறும் எல்லையில்
நான் தனிமைப்படுகிறேன்...
பின்பு
கேள்வியும் பதிலும்
எனக்குள்ளே
எழும்பி அமிழ்கிறது.
என்னுலகம்
யாவற்றிலுமிருந்து
தப்பி
புதிய உலகத்தை
கட்டமைக்கிறது.
அந்த உலகத்தின்
தலைவன் நான்.
நிமிடம் கரைய... கரைய..
அந்த உலகமாகவே
நான் உருவெடுத்து
உருகிவழிகிறேன்.
வினாவிடையாவும்
தியானத்தின் உச்சத்தில்
எரிந்தது.
என்னைச்சுற்றி
சுழல்வதெல்லாம்
விடையின் வீரியமே...
இந்தத்தனிமை
என்
எந்திரமூளைக்குள்
பூவனத்தை
பதியன் போட்டது.
என்னை அவ்வப்போது
புதிதாய் பிறப்பிக்கும்
தனிமையே!
நீ எனக்குள் எழுதும்
மௌனக்கவிதை
என் மனதின் மொழி...