என் குரல்....
மழை நாள்...
மிதந்து செல்கிறது காகிதக் கப்பல்.
குழந்தைகளின் கூச்சல்களுக்கிடையே...
எனக்கு மட்டும் கேட்கிறது உன் குரல்..
உனக்கும் கேட்கலாம் ...
நானில்லாத அந்தக் கரையில்
என் குரல்.
***************************************************************
செடியிலிருக்கும்
பூக்களைப் பார்க்கிறேன்...
யாரும் அறியாமல் இதழ்களைக்
கூம்பிக்கொள்ளும்...அவைகளும்
என்னைப் போலவே
வருத்தமாய் இருக்கின்றன
உன்னைப் பிரிந்திருப்பதில்.
*****************************************************************
புத்தகத்திற்குள்...
மயிலிறகு ஒளித்து விளையாடுகிறான்
குழந்தை.
எனக்குள்ளும் தோகை விரித்தாடுகிறது
மயிலிறகு நாட்கள்.
*****************************************************************
என் பெயருக்கும்
உன் பெயருக்கும்...
இடையிலான தூரத்தை
நான் நம் பெயர் செதுக்கிய
ஆலமரத்திலிருந்து....
எட்டிப் பார்த்து...எட்டிப்பார்த்து..
அளந்து கொண்டிருக்கிறது
இந்த அணில்.
********************************************************************