சந்தைக் கடைகளின் சலசலப்பில் ...................................!
பரபரப்பில்
பறக்கும் வியாபாரத் தந்திரங்கள் ;
பவ்வியமாய் பயணிக்கும் தேவைகள் ,
பார்த்துப் பார்த்து தயங்கும் பணத்தாள்கள் !
சற்றும்
சத்தமெழுப்பா காய்கறிகள் ;
சகட்டுமேனிக்கு நடனமாடும் விலைகள் ,
சலசலப்புகளினூடே படிதாண்டிய சங்கதிகள் !
முகமறிந்தவர்க்கு
முக்காடுபோடாக் கடைகள் ,
முன்தினமே வந்துவிட்ட இறக்குமதிகள் ;
முனகியபடி நெளியும் கூலிகளின் கைவலிகள் !
பெருவாரியாய்
பெற்றுக்கொண்ட தொகுதிகளில் ,
நாற்றங்கள் பரப்பி ஆட்சி பிடித்துவிட்டு
நக்கலடிப்பில் முழுகவனமாய் அழுகல்கள் !
கணம்சேரக்
காத்திருக்கும் கூடைகள் ;
கைக்கடக்கமாய் ஒடுங்கிய பட்டியல்களோ
கைப்பைகளில் ஒதுங்கிய தற்காலிக குடியிருப்பு !
ஆரவாரங்களில்
ஆக்கிரமிக்கும் கவன ஈர்ப்புகள் ;
அசடுவழியும் இருசக்கர வேகங்கள் ,
அலட்டல்களில் ஓரமாகும் மகிழ்வுந்துகள் !
ஒருவழியாய்
ஒவ்வொருவீட்டுச் சமையல்திட்டங்களும்
ஒழுங்குகாட்டிக் கொண்டே விடைபெறுகையில் ,
ஒற்றிய வேர்வையும் அலுப்பில் உறங்கிப்போனது !