என் மகள் கவிதையாகிறாள்….
பொட்டு வைத்துப் போனாள்
பின்
அதற்கு நேராக
என் புருவங்களை
நகர்த்திக் கொண்டேன்…
***********************************
மகள் பிறந்ததும்
முதலில்,
சுண்டு விரல்தான்
பிடித்துப் பார்த்தேன்.
அதன் நினைவாய்,
எங்கும், என்
சுண்டுவிரல் பிடித்தே வருகிறாள்
****************************************************
பாதங்களால்
நிறைகிறது
என் வீடு
*************
குழந்தை முத்தமிட்ட எச்சில்
ஈர நினைவாகி விடுகிறது.
*****************************************
முழு உணர்வில்
துவங்கி
பாதி உணர்வில் தான்
முடிக்கிறோம் முத்தங்களை…
அப்படியில்லை குழந்தைகள்..!
**********************************************
குழந்தைகளிடம் நான்
குழந்தையாக இருக்கும் போது
என் எல்லா வன்மங்களும்
நினைவுக்கு வந்து
குற்ற உணர்வாகி விடுகிறது
********************************************
குவளை நீர் மொத்தமும்
சிந்தி விட்டாலும்
மகள் கொண்டு வந்ததில்
என் தாகம் தீர்ந்தது…
********************************
நெஞ்சில் தான் படுத்திருப்பாள்
அவள் இல்லாத நேரத்தில்
பதிலுக்கு தலையணை
கொடுத்துப் போனாள்…
மூச்சுத் திணறியது.