மகளீர்கள், தெய்வங்கள்......

நினைத்து நினைத்துத்தான் பார்க்கிறேன்,
அன்னியப்படுத்திப் பார்த்திடமுடியவில்லை
அந்த அருமை மகளீரை.

அவள் உறங்கிப் பார்த்ததில்லை
சிரிப்புடன் மரணித்துக் கிடத்தும்வரை.

விழிப்பது அதிகாலையாய்த்தான் இருக்கும்,
படுப்பது பின்னிரவாய்த்தான் இருந்திருக்கும்.

கண்விழித்ததும் நாங்கள் காண்பது,
கால்களை நீட்டி அமர்ந்து கதை விவாதம்
செய்திடுவது அன்றய தினசரிச் செய்திகளை.

அடுத்த நொடி இனிமையான அந்த டீ.
அரட்டையொடு சேர்ந்த அரவணைப்பு.
அன்பாக அதிலொரு ஆரவார சண்டை.

இங்கே இப்பொழுது பேசிக்கொண்டுதானே
இருந்தாள், பின்னெப்பொழுது சமைத்தாள்?
விளங்கவேமுடியாத அசுரவேகம்.

பள்ளி செல்கையில் வைத்த இடம்
மாறி மறந்த பொருள் அனைத்தையும்
எடுத்து அவரவர்க்கு தேடித்தேடியுதவி.

மாலையில் விளையாடையில்,
நேரம் சிலதுளி தாண்டையில்
தொடையில் நுள்ளிடும் பொறுப்பு.

தூசி கண்டதில்லை, நேரம்
தவறியதில்லை, சமையல் ருசி
மாறியதில்லை, வைத்த பொருள்
இடம் மாறிப்போனதில்லை.

உறங்கியதை, சமையல் செய்வதை,
வேலை செய்வதை, மற்ற இன்னபிற
கடமைகளை செய்வதினை கண்டதில்லை.

கண்டதெல்லாம் நேரத்திற்கு எல்லாமும்
கணகச்சிதமாய் முடிந்திருந்ததைத்தான்.
எந்தப்பொழுது நடக்குமென யூகிக்கமுடிவதில்லை.

வெளிவேலைகள் எல்லாமும் அவள்தான்.
காய்கறி வாங்கிவருவதும் அவள்தான்.
மாவாட்டுவதும் மாடுகறப்பதும் அவள்தான்.

தெருவினில் வரிசையில்னின்று நீர், குடம்
குடமாய் கொண்டுவருவதும் அவள்தான்.
அங்காடி பொருள் சுமப்பதும் அவள்தான்.

முழுவாரமும் என்றென்று என்ன
சமையல் என்பதினை முடிவுசெய்து,
வருமான மிச்சம் செய்வதும் அவள்தான்.

வரவு செலவு, வாங்கவேண்டியது,
கொடுக்கவேண்டியது, பார்க்கவேண்டியது
மருத்துவ ஒதுக்கீடு மொத்தமும் அவள்தான்.

வாழ்ந்தவரை மக்களுக்காகவும்,
மனைக்காகவும்,மணவாளனுக்காகவுமே
மனம் நோகாமல் இன்பமாய் வாழ்ந்தவள்.

துன்பங்களையும் இன்முகமாய் கொண்டு,
துயரங்களையும், வறுமையினையும்,
வென்று வாழ்வுக்கு ஒளிவிளக்கு ஏற்றியவள்.

முழு உரிமையையும் கைக்குள் கொண்டவள்.
தருணத்தில் சரியான முடிவுகளையே எடுத்தவள்.
குறையாய் எதையும் எவரும் பேசிட இடம்தராதவள்.

கும்பிடும் தெய்வமான தாயவள்தனை எங்ஙனம்
மகளீர் என ஒதுக்கி முத்திரையிட்டு தழுவத்தழுவ,
வாழ்த்திடுவது சொல்வீர் எம் நண்பர்காள்.

தெய்வம், தாயில்லாமல் எவருமில்லை.

எழுதியவர் : மீன் (8-Mar-13, 7:19 pm)
பார்வை : 107

மேலே