2025 ஒரு தொலை நோக்குப் பார்வை

அளவிற்கு மீறிய அந்நியச் செலவாணி.
பணியிடங்கள் முழுவதும் எந்திர மனிதர்கள்.
ஆங்கிலம் பேசும் மக்கள் தொகையில்
முதலிடம் இந்தியர்களுக்கே.
அயல் நாட்டுப் பத்திரிக்கைகள்
விளம்பர ஊடகங்கள்
அனைத்தும் இந்தியர்களின் கைகளில்.
அணு ஆயுத உற்பத்தியிலும்
ஏற்றுமதியிலும்
நம்மவர்க்கே முதலிடம்.
கடற்கரைகளிலும்
ஆழ் கடல்களிலும்
ஏராளமான எரிவாயுப் படிமங்கள்
கண்டெடுக்கப்பட
கடற்கரை கிராமங்கள் எல்லாம்
காணாமல் போகலாம்.
எரி வாயு ஏற்றுமதியிலும்
முன்னனியில் நாம் இருக்கலாம்.
ஐம்பதிற்குக் குறையாமல்
மாநிலங்கள் துண்டாடப்படலாம்.
அமெரிக்க அரசுக்கு அடங்கிய
விசுவாசமான
சர்வதேச கட்டப்பஞ்சாயத்து
உப தலைமை பொறுப்பையும்
நாம் ஏற்கலாம்.
அரிசிக்காகவும், குடி நீருக்காகவும்
கப்பலின் வருகைக்குக்
காத்திருக்கும் கவிஞன் ஒருவன்
அப்போதும் ஒரு கவிதை
வாசித்துக் கொண்டிருப்பான்
உழவின் மகத்துவத்தைப் பற்றியும்
உணவுப் பற்றாக் குறையால்
இந்த உலகம் அழியப்போகும்
கடைசி நாடகளைப் பற்றியும்.

எழுதியவர் : பிரேம பிரபா (9-Mar-13, 9:09 am)
பார்வை : 124

மேலே