முப்புள்ளிகளும் ஓர் ஆச்சரியக்குறியும்...!

மூளை சுருக்கங்களில்
வழுக்கி விழும்
கற்பனையை - கண்களில்
கருவேற்று - கைகளால்
உயிர்ப்பிப்பது கவிதை !

வார்த்தைகளும் வரிகளும்
கூடிக் குலவும்
செவ்வாய்ச் சந்தை !
சத்தங்கள் இல்லா
வெற்றுச் சந்துகளை
சந்தங்களின் சொந்தங்கள்
நிரப்பிப் பரப்புவதுண்டு !

அழகியலும் கருத்தியலும்
சமபாதி கலந்த சாமந்தியது
ஆயினும் முட்களுண்டு...
எழுத்துக்களின் - ஆள்
மாறாட்டத்தால் - மாறி
ஆடிய தப்பாட்டத்தால் !
ஆடும் தள்ளாட்டத்தால் !

எவ்வளவு குறைவான
வார்த்தைகள் குடித்து
அழகாகிறேன்
ஆழமாகிறேன்
அழவைக்கிறேன் - என்பதே
என் வெற்றியின் நீளம் !

வார்த்தைப் பிரயோக
வல்லமை அவசியம்...
தவறெனில் தவறாமல்
உனைக் கவிழ்க்க
வல்லஆமையும் கூட !

எதுகையில்லையேல்
கவிதைக்கு ஏது கை ?
மோனையல்லவோ
கவித்தேர் இழுக்கும் யானை !

ஆயிரமிருந்தென்ன...
என்னை உங்களுக்கு
அடையாளப்படுத்த
மூன்று புள்ளிகளும்
ஒரு ஆச்சர்யக்குறியும்தானே
அவசியமாகிறது !

கற்பனை கரைத்தூற்றி
எழுதுகோலால் ஏரோட்டும்
கவிஞர் பெருமக்களே...
எனக்கே தெரியாத என்னை
எனக்கு அறிமுகப்படுத்துவதற்கு
நன்றிகள் கோடி...!
என்னை பெருவாரியாக
பெற்றுப் போடும் காதலர்களுக்கும்
காரணமான காதலிகளுக்கும் கூட
என் நன்றியில் நற்பங்குண்டு !

எம்மொழியிலும்
நான் அழகுதான்...
தமிழ்ச் சேலை உடுத்தும்போது
என் கண்ணே படும் அழகாய்...!

எழுதியவர் : வினோதன் (10-Mar-13, 8:48 am)
பார்வை : 356

மேலே