காதலின் பகைவர் (சீதனம்??)

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
நிறைகயலும் அலைகளையும் உருவாக்கினாள்
பார் செய்து பாரில்பல பனிமலைகளும்,
பளிங்கெனவே உருகிநிலம் பரவச்செய்தாள்
நேர் நிற்க நில்லென்று தினகரனையும்
நிலவினையும் சுழன்றோட நிகழ்வு செய்தாள்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமனிதரும்
சேர்ந்து வாழென்றேனோ சிந்தை கொண்டாள்

பாராக்கி இயற்கைவளம் மனிதமீந்து
பாலிருவர் ஆணோடு பெண்ணுமாக்கி
பேராக்கி அன்னையெனப் பிள்ளையென்றும்
பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வுசெய்து
குருதி தசைஎன்பென்று கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்

விண்ணாக்கி வெகுகதியில் கோள்கள் சுற்றி
விளையாடி அசைக்கின்ற சக்தி தேவி
ஆணாகப் பெண்ணாக இருமேனியும்
அறிவீந்த இயற்கைதனும் உண்டாக்கியே
கண்ணாக்கி கன்னியிடம் காதல்கொள்ளும்
கருவாக்கிப் பெரிதாக்கி உணர்வீந்தவள்
மண்ணாகப் போகுமுடல் மதனாக்கிடும்
மலர்கணையில் கிளர்வுபெற மாயமிட்டாள்

வானாக்கி ஒளியூட்டி வளமோங்கியும்
வண்ணமதி விண்ணேற வழிசெய்தவள்
தேனாக்கித் தேன்மலரில் சுவையாக்கியும்
செய்தபின்னர் தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
தனையாக்கி குலம்பெருக வழிசெய்தவள்
ஏனாக்கி வைத்தனளோ இயற்கை ஈர்ப்பாம்
இளமைதனில் காதல் என அறிவோமன்றோ

இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
இளைமையே தாய்மைக்கு ஏதுவானால்
இறைநோக்கம் இளமையுடல் கருவாக்குதல்
இதன்மூலம் மனித குலம் விரிவாக்குதல்
கறைகொண்டு இவ்வுணர்வைத் தடுக்கலாமோ
கழிவெண்ணம் கொண்டியல்பைக் கெடுக்கலாமோ
நிறைமனதில் இளமைதவித் தேங்கிநிற்க
நில்லென்று தடைபோட்டு நிறுத்தலாமோ

காதல் கொள்ள சாதிமுறை பார்ப்பதேனோ
கன்னிவதை செய்திளமை கருக்கலாமோ
போதைகொண்டு பெண்ணுடலைக் கெடுக்கலாமோ
பின்னர் மணம்செய்யப்- பணம் கேட்கலாமோ
மாதை மணம் கொள்ளவரும் மணவாளனை
மனம்கனிந்தும் சமுதாய விதிபிரிப்பதேன்
ஏதுசக்தி இதுகண்டு குமுறிடாளோ
இதுகுற்ற மென்றெம்மைச் சினந்திடாளோ

ஆதலினால் மங்கையரை வாடவைத்து
அழுதவிழியோடுமனம் கலங்கவிட்டு
காதலினை கொல்லும் பழி நாம்கொள்வதோ
காண்மனித சிருஷ்டியின் பகையாவதோ
மோதலினை காதல்மனம் கொள்ளவைத்து
மோசமுற இளமை உடல் வருந்தவிட்டு
சேதமுற வைத்தபின் சேரவைக்கும்
செழிப்பற்ற சமுதாயம் செய்யவேண்டாம்

எழுதியவர் : கிரிகாசன் (12-Mar-13, 1:27 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 65

மேலே