திரை கடல் தாண்டி திரவியம் தேடும் கணவன்
துணைவியே
உன்னை விட்டு
பிரிந்து தூரங்கள்
அதிகரிக்க அதிகரிக்க
நீயோ என்
சிந்தனைகளால் நெருங்கி
நெருங்கி வருகிறாய்
உன் கதகதப்பில்
உறங்கி பழகிய
உடல் நீ
இல்லாமல் உறக்கம்
கொள்ள அடம்கொள்கிறது
நான் மழையில்
நனைய நீ
நாற்காலி
ஏறி என்
தலை துவட்டிய
நற்பொழுதுகளை எண்ணி
ஏங்கி வாடுகிறேன்
நீ என்முகத்தில்
சவரம் பழகி
ஏற்படுத்திய தழும்பை
ரசித்தே என்
பலமணிநேரம் கண்ணாடிமுன்
கழிந்து விடுகிறது
என் உணர்ச்சிகளை
தூண்டும் எவ்வித
உணவு பொருள்களையும்
உண்பதில்லை நான்
பத்தியம் இருக்கிறேன்
ஈரத்துண்டுகளை கட்டி
பக்தி கொள்கிறேன்
என் உள்ளமும்
உடலும் உனக்கே
சொந்தம் என்ற
ஒரே காரணத்தால்
அதை அழகுற
பேணி காக்கிறேன்
நேரம் கழிய
நாட்கள் முடியும்
பொழுது நெருங்க
இரவு விடியும்
உனை நெருங்க
நெருங்க தூரம்
மரிக்கும் காதலியே
காத்திரு நான்
கடல் தாண்டியதும்
உனக்காகத்தான் பொருள்
தேடுவதும் உனக்காகத்தான்
இந்த அவசிய
பிரிவு உன்மீதான
என் காதலை
வான் நோக்கி
வளர்த்து விட்டது
உன் அருமையை
அழகுற உணர்த்திவிட்டது
கண்ணகியை பிரிந்த
கோவலன் இல்லை
நான் காதல்
மனைவியை பிரிந்த
கணவன் நான்
இப்படிக்கு
திரை கடல் தாண்டி திரவியம் தேடும்
உன் அன்பு கணவன்