மலர்ந்த மொட்டும் உதிர்ந்த பூவும்
மலர்ந்த மொட்டு
உதிர்ந்த பூவிடம் கேட்டது
நேற்றே நீ வந்தாயே!
அப்படி என்ன சாதித்தாய்?
காண்போர் கண்ணுக்கு குளிர்ச்சி தந்தேன்
மனதிற்கு மகிழ்ச்சி தந்தேன்
முகரும் நாசிக்கு வாசம் தந்தேன்
என்னாலான பாசம் தந்தேன்
வண்ணத்துப்பூச்சிக்கு தேனைத் தந்தேன்
இளைப்பாற இடத்தை தந்தேன்
காற்றின் இசைக்கு நடனம் தந்தேன்
அழகாய் சிரித்து அன்பை தந்தேன்
இத்தனை தந்தென்ன கண்டாய்!
இப்போது உன்நிலை கண்டாயா?
காட்டிற்குள் பிறந்திருந்தால்
வீணாய் நான் போயிருப்பேன்
மதியா வீட்டினிலே பிறந்திருந்தால்
முன்பே வாடித்தான் போயிருப்பேன்
அழகாய் தோட்டத்திலே பிறந்ததனால்
சுகமாய் பெருமையுடன் வாழ்ந்தேனே!
எவருக்கும் துன்பத்தை
தரவில்லை நானே!
எவரின் கண்ணீருக்கும் உரமாக
வரவில்லை நானே!
வாழும்வரை வாசமாய் வாழ்ந்தேன்!
பலர் மனதின் நேசமாய் வாழ்ந்தேன்!
நல்லது என் முன்பிறப்பே!
உன் பாதம் நான் பணிவேன்!
உன் வழியே தான் நடப்பேன்!