மனமிருந்தால்..மரமும் மனிதனாகும்..! பொள்ளாச்சி அபி.

இலக்கியம் படைக்க இதுதான் கருப் பொருளென எந்த எல்லைகளும் தேவையில்லை..ஒரு படைப்பாளி முடிவு செய்துவிட்டால்..படைக் களத்து சிப்பாய் போல இலக்கிய தளத்தில் எதுவேண்டுமானாலும் பேசும்.பாடும்.தனது உணர்வுகளை அள்ளிக் கொட்டி நம்மை ஆட்கொண்டுவிடும்.பேசுவது, பாடுவது என நேரடியாக நம்மிடம் தொடர்பு கொள்ளும் கருப்பொருள்கள் சிலநேரம் எதுவுமே பேசாமல் ஒரு மௌன சாட்சியாக நின்று கொண்டு நம்மைப் பாடவைக்கிறது.பேச வைக்கிறது.வாசிப்பவனை சிரிக்க வைக்கிறது.சிலசமயம்,நம் கண்களிலிருந்து கண்ணீரையும் வரவழைக்கிறது. ஒரு உயிரின் அவஸ்தையை,உயிரற்ற எழுத்துக்களின் மூலம்,மற்றொரு உயிரினை ஆட்டுவிக்க முடியுமா..?

“முடியும்”என்பதை இன்னுமொரு தனது படைப்பினால் நிரூபித்துச் சென்றிருக்கிறார் நமது இலக்கியமுரசு அகன் அவர்கள்.ஆமாம் தோழர்களே..! கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறந்த இலக்கிய ஏடுகளில் ஒன்றாக இன்றும் அறியப்படும் “கலைமகள் இதழ்” தான் நடத்தியபோட்டியில் மிகச்சிறந்த நாவலாகப் பரிசு பெற்ற ஒரு காவியம்தான் வேம்பில் ஒரு செண்பகம்.!

இந்த நாவலில்,பெரும்பாலும் புனைவாளர்களால் எழுதப்படும் காதல் மட்டுமோ,சமூகநீதி மட்டுமோ,சாதி மதப்பிரிவினைகள் மட்டுமோ என ஒரு வட்டத்திற்குள் மட்டுமே இயங்காமல்,ஒரு கிராமத்தின் அத்தனை அம்சங்களும் இணைந்த ஒரு சில ஆண்டுகளின்.., அங்கு நிலவிய யதார்த்த வாழ்க்கையின் அவலங்களையும்,மாண்புகளையும்,உயர்வுகளையும் தாழ்வுகளையும் காட்சிப்படுத்தி செல்கிறது இந்நாவல்.

வாசிப்பவரின் அனுபவத்திற்கேற்ப,இந்த உலகைப் புரிந்து கொள்ள வழிகாட்டும் உன்னத படைப்பாய் திகழும் இந்நாவலின் சில பகுதிகள் எங்கும் காணக்கிடைக்கும் யதார்த்தம்.இதில் உலவும் பாத்திரங்கள் நீங்களும் நானும் அன்றாடமும் சந்தித்தவை..இன்னும் சொல்லப்போனால் அது நாமாகக்கூட இருந்திருக்கலாம்.

இந்நாவல் முழுக்க நான் ஒரு விஷயத்தைத் தேடினேன்.உண்மைக்கு புறம்பான புனைவுகளற்று ஒரு நாவல் வெளிவந்து விடமுடியுமா..? இரண்டு காட்சிகளை இணைக்கும் இடத்தில் சற்றேனும் கற்பனையைக் கலக்க.ஒரு கதாசிரியனுக்கு அவ்வப்போது நெருக்கடி ஏற்படும் என்பது எனது அனுபவம்.அதுபோன்று அமைந்த இடங்களைத்தான் நானும் தேடினேன்.ஒரு முறையல்ல..இடைவெளிவிட்டு மூன்று முறை வாசித்தேன்.ஊஹ{ம்..ஒரு இடத்தைக் கூட அவ்வாறு என்னால் அடையாளப்படுத்த முடியவில்லை.இரத்தமுமம் சதையுமான மனிதர்கள்..அவர்களின் எண்ணவோட்டங்கள்..,குயுக்தியான, வெளிப்படையான செயல்பாடுகள் என அத்தனை விஷயங்களிலும் உண்மை உண்மை..யதாhத்தம்..! குறிப்பிடத்தக்க இந்த அம்சம், அந்த நாவலைப் பொறுத்தவரை மிகப் பெரும் வெற்றியாகவே நான் காண்கிறேன்.

இந்நாவலின் கருப்பொருளைப் பொருத்தவரை,கதாநாயகன் சகல வல்லமையும் மிக்க, அர்னால்டு,ராம்போ,ஜேம்ஸ்பாண்டு போன்றவர்களோ..,இல்லை நம்மஊரு கதாநாயகியின் துகில் உரிவதற்காகவே காத்திருக்கும் வில்லன்களை சரியான சமயத்தில் எப்போதும் வந்து விடும் விஜய்,அஜீத்,அர்ஜுன் போன்றவர்களோ இல்லை என்பது மிகவும் ஞாபகமாகக் குறிப்பிடவேண்டிய விஷயம்.!

சிறுகதை,நாவல் எனில் ஏதோவொரு கதாநாயகன் தேவையல்லவா..? என்று நாம் பழகிப்போன சிந்தனைகளிலிருந்து நமக்கொரு கேள்வி எழத்தான் செய்யும். இந்தக் கதையின் நாயகனாக வீராச்சாமி என்றொரு தாத்தாதான் நம்மையெல்லாம் ஆட்டிவைக்கிறார்.வாழ்க்கையில் நாம் சந்தித்த மறக்க முடியாத மனிதர்களைப் போலவே..மனதிற்குள் குடியேறி விடுகிறார்.! அவரின் துணைவியான நாயகி செண்பகமும் கூட.!

அதே சமயம்…மரம் எங்காவது மனிதராய் மாறுவது நாம் இதுவரை கேள்விப்பட்டது கூட கிடையாது.அவ்வப்போது அவை கடவுள் அவதாரம் வேண்டுமெனில் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால்,இந்தக்கதையில் ஒரு மரம் மனிதராக அவதாரமெடுக்கிறது.இது ஏதோ மாயா ஜாலமல்ல..கதையின் நிகழ்வுப் போக்கிலே நிகழ்கின்ற மிக அருமையான யதார்த்தம்.இந்த அதிசயத்தை இந்நாவலைப் படிப்பவர்களே நேரடியாக உணர முடியும்.!

ஒரு வேப்பமரம்..கதை நெடுகிலும் நம்மோடு பயணிக்கிற..அது நமக்கு சொல்லும் வாழ்வியல் அனுபவங்கள் ஏராளம்.! ஒரு மரம் குறித்து இவ்வளவு விஷயங்களை பகிர்ந்து கொள்ளமுடியுமா..? அத்தனையும் சர்வ சாதாரணமாக நம்மிடம் சொல்லிச் செல்ல இந்தக் கதாசிரியரால் முடியுமெனில்,எவ்வளவு விஷயத்தைக் கிரகித்திருக்க வேண்டும்..? அதனையும் தான் சொல்லவேண்டிய இடத்தில்,விதத்தில் வெற்றிகரமாகச் சொல்லிச் செல்வதற்கு எவ்வளவு அனுபவம் வேண்டும்..?.மேலும் வட்டார வழக்காய் நாவல் முழுவதும் விரவி நிற்கின்ற வார்த்தைகள்..அப்பப்பா..இது மிகவும் உழைப்பையும்,நேரத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயம்தான் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.!. ஆனால்,இந்நாவல்,ஒரே இரவில் ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்டது என்று அறிய வந்தபோது,ஏற்பட்ட ஆச்சரியம் என்னை மூச்சுத் திணற வைத்தது என்பதும் நிஜம்.!

ஒரு மரம் தனது இருப்பின் காரணமாக,மனிதனுக்கு தரும் நேரடிப் பயன்களைக் குறித்து பேசிச் செல்லும் இந்நாவல்,மரங்களால்.., மறைமுகமாக எத்தனை நன்மைகள் கிடைக்கிறது என்பதை நமக்கும் மறைமுகமாகவே விளக்கிச் செல்கிறது.இந்த விஷயங்களை வலியுறுத்தும் விதத்தில் அறிஞர்களின்,கவிஞர்களின் மேற்கோள்கள்,கவிதைகள்..அத்தியாயங்களின் முகப்பில் காணப்படுவது வெகு சிறப்பு.!

இதே தளத்தில் வந்த, எனது தொடரான “ஆதலினால் காதலித்தேன்..”நூலாக்கம் செய்யப்பட்டபோது,அதன் வடிவத்தை நூலாகப் பெற்ற யாவரும் பாராட்டினர்.அதற்கான காரணமும் எனக்கு இப்போதுதான் விளங்கியது. தோழர் அகன் ஏற்கனவே பெற்ற வெற்றியின் அனுபவத்தில்தான் எனது நூலையும் வடிவமைத்திருக்கிறார்.அதுவே எனது நூலுக்கும் கிடைத்த பெருமை.

தோழர் திரு.அகன் அவர்களின் இந்த நூலைப் பற்றி,இப்போது நான் எழுதி வெளியிட அவசியம் என்ன வந்தது..? அவசியம் உண்டு..தற்போது தளத்தில் மரங்களைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியான படைப்புகள்,அது சார்ந்த கருத்துக்கள் நம் படைப்பாளிகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் இந்த நாவலை நமது மறுவாசிப்பிற்கு உட்படுத்துவோமானால்,இன்னும் நிறையக் கருக்கள் உருவாக,அருமையான வாய்ப்புகள் கிட்டுமே,மிகவும் பொருத்தமாகவும் இருக்குமே என்ற ஆவலில்தான் இதனை இங்கு பதிவிடுகிறேன் தோழர்களே..!
“வேம்பில் ஒரு செண்பகம்” என்ற பெயருடன் வெளிவந்து,இலக்கிய ஆர்வலர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இந்த நூலை நீங்களும் வாசிக்கவேண்டுமா..? இதே தளத்தில்,அப்போது தளத்தில் நிலவி வந்த ஒரு இறுக்கமான சூழ்நிலையை இலகுவாக்கும் முயற்சியாக, “தோழா வா நமக்கு வேலையிருக்கு..” என்ற பெயரில் பதிவாகியுள்ள நாவல்தான் அது..! நீங்களும் வாசிக்கலாம்..ஏற்கனவே தொடராக நீங்கள் வாசித்திருந்தாலும்..முழுமையாக இப்போது மறு வாசிப்பிற்கு அதனை உட்படுத்தலாம்.நான் பெற்ற வாசிப்பனுபவத்தை நீங்களும் பெறலாம்..!
உங்கள் கருத்துக்களை தற்போதைய எண்ணஓட்டத்தில் பதியலாம்.! வாழ்த்துக்கள்..!

அன்புடன் பொள்ளாச்சி அபி.!!
------------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (17-Mar-13, 6:16 pm)
பார்வை : 178

மேலே