என்னைப் போன்றவர்களுக்காக மட்டும்...

முன்பை விட அதிகமாய்
கோபம் வருகிறது எனக்கு.

விடை தெரியாத வாழ்வின் கேள்வி ஒன்று....
தனக்கான பதிலை...
"உங்களில் யாருக்கேனும் தெரியுமா?"...
என்னும் அரற்றலோடு...
என்னைப் போலவே நீங்களும் எப்பொழுதும்
மூடி வைத்திருக்கும்...
உங்களுடலின் ஐந்து புலன்களை...
யாசித்து...யாசித்து...முத்தமிட்டு உலர்கிறது...
தனது வாழ்க்கை முடிந்த சருகென.

அநீதிகள்...
சுதந்திரமாய் உலவும் தெருக்களில்...
அதை எதிர்க்கத் தெரியாத
என் பிறப்பும்...வளர்ப்பும்...
கோல் வைத்திருப்பவன் முன்னால் ஆடும்
பரிதாபக் குரங்கு என...
ஆடி அடங்குகிறது தன் வெறித்த விழியுடன்...
பெரும் கருணையை இறைஞ்சிய படி.

எழும்புவதாய் சொல்லும்...
என் கனவின் உரத்த குரல்களோ...
யாருக்கும் தெரியாமல் ...
கழிப்பறையோரம் பிடிக்கப்படும்
திருட்டுப் புகை போல...
உதடுகளிலிருந்து வயிற்றுக்குள் விழுந்து..
எரித்துவிடுகிறது...எனது புரட்சியை.

என் வறட்டுக் கவிதைகளின்...
கோப தாபங்களும்..கூச்சல்களும்...
"மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்..."என்னும்
சுவர் விளம்பரங்களின் அளவே
வீரம் பேசித் திரிகின்றன...
உங்களின் அவசர உலகத்தில்.

உங்களின்...சமூக ஏணிகளோ...
அதைத் தனக்கெனத் திருடிக்கொண்டவனின்
வீட்டிற்குள் விளக்கேற்றிக் கொண்டிருக்கின்றன...
எனது வீதிகளை இருட்டாக்கியபடி.

எனது வாழ்க்கையோ...
எப்பொழுதும் வயிற்றில்...தொற்றிய ஒற்றாய் இருக்கும்...
ஒரு சாண் காயசண்டிகையின் கால் பிடித்து
வாழ்க்கையை சமரசம் பேசிக் கொண்டிருக்கிறது.

நான் வளர்த்துக் கொண்டிருக்கும்...என் சிறகுகளோ...
எனக்குப் பறக்கக் கற்றுத் தராமல்...
எவனுடைய கொண்டைக்கோ...
அலங்காரமாகிக் கொண்டிருக்க...

பறவையாயிருந்தும்...
நீந்தியும்..நடந்தும்...நான் கடக்கும் எல்லைகள்...
என்னைச் சுற்றி எப்பொழுதும் இருக்கும்...
ஆதி இருட்டுக்குள் மூழ்கிவிட...

இந்த வழியாக....
"கடவுள்" எப்பொழுது வருவான்? என...

மண்ணுக்கடியில் நெளிந்து..நெளிந்து...
தலை தூக்கும் புழுவெனக்...
காத்துக் கொண்டிருக்கிறேன் ...

இன்றுவரை...
எனது மொழியை உங்களிடம் பேசத் தெரியாமல்...
என் அடையாளங்களை...நானே அறியாமல்...
மற்றும்...
உங்களைப் போலவே...
எனக்கான வாழ்வை வாழத் தெரியாமலும்.

எழுதியவர் : (18-Mar-13, 1:13 pm)
பார்வை : 147

மேலே