போர் ஆடுவோம் !

எரித்துப் போராடும்
வடக்கத்தியவர்களைப்
போலல்லாமல் - எரிந்து
போராடும் எங்களைக்
காண்கையில் - உங்களுக்கு
ஏளனமாகவே இருக்கும் !

அசுத்த அரசியல் - ஒட்டுப்
பொறுக்கிகளும் - ஓட்டுப்
பொறுக்கிகளும் - ஆடும்
ஆயிரம் நாடகங்கள்
கண்டு லயித்தது போதும் !
கனன்று எழுவோம்
அக்னிக் கங்குகளாக !

சுயநல கோந்துகள்
உருகி விடுபட்டு
வெளிவந்தால் - ஆதித்
தமிழன் - தாவிக் குதித்து
எழுந்து வருவான் !

ஆணவ வாதிகள்
சாதிக்க முடியாததை
மாணவ சாதிகள் - நாங்கள்
சாதித்து முடிப்போம் - இதில்
சதியெனில் முறியடிப்போம் !
வென்று உரியடிப்போம் !

இரைப்பை வீட்டை
கூட்டிக் கழுவி
குழுமிக் கிடந்து
போராடும் எங்களுக்கு...
செவி கொடுங்கள் - தவறினால்
செவிட்டில் கொடுப்போம்
செருப்பால் கொடுப்போம் !

எஞ்சிய - எங்கள்
மரபணு சொந்தங்களுக்கு
குரல் குடுக்க முடியாமல்
எம் குரல்வளை நெரித்தால்...
எங்கள் கை - இனிமேலும்
இறையாண்மை பறிக்காது !

முதலாம் இராஜராஜனிடம்
மண்டியிட்டு - மரணித்த
ஐந்தாம் மஹிந்தனிடம்
கேட்டுபாருங்கள் - தமிழனின்
வீரத்தை - உங்கள் வாளுக்கும்
வாலுக்கும் -சுளுக்கெடுக்கும்
வித்தை யாம் அறிவோம் !

அலரி அலறும்வரை
நாங்கள் போராடுவோம்...
இறையாண்மை எனும்
கைகட்டை அவிழ்த்து
விட்டுப் பாருங்கள்...
சோழப் புலிகளின்
கால் நிகங்களுள்
குடியிருக்கும் - அரிவாள்
மனைகளால் - அரிகளாய்
அறியப்படும் நரிகளும்
ஓநாய்களும் அணுஅணுவாய்
வரிவரியாய் அரியப்படும் !

எங்களையும் - எங்கள்
உறவுகளையும் காப்பாற்றுங்கள் !
வக்கில்லையெனில்
கை விலங்கு அவிழுங்கள் !
மறுத்தால் - அடுத்தென்ன ?
அறுத்தெறிவோம்
அகிலமும் அறியவே !
அகிலமும் எரியவே !

என்னை அடிக்கும்
பக்கத்து வீட்டுக்காரனுடன்
கை குலுக்கும் - நீ
எனக்கெப்படித் தாயாவாய் ???

நம் உறவுகள் சாகவிட்டு...
இறையாண்மை பேணி
ஆண்மையின்றி நாணி
வளர்க்கும் நம் உயிர்
வளர்ந்த மயிருக்கு நிகரல்லவா ?

இறங்கிப் போராடுவோம்...
தேவையெனில்
இறங்கிப் போர் ஆடுவோம் !

எழுதியவர் : வினோதன் (18-Mar-13, 10:30 pm)
பார்வை : 305

மேலே