உங்களுக்கும்..எங்களுக்கும்....(அகன் )
உங்களுக்கெல்லாம்
காலைப் பொழுதை
கதிரவன் தயாரிக்கிறான்
-வெதுவெதுப்பாய்....
---எங்களுக்கெல்லாம்
முதல்நாள் குண்டடியின்
கோரவலி தயாரித்தன
-முனகலாய்....!
உங்களுக்கெல்லாம்
வீடுகளுக்குள் தென்றல்
குசலம் விசாரிக்கின்றது
-குதூகலமாய்..
---எங்களுக்கெல்லாம்
இரத்த வாடை முகாம்களில்
மரண போர்வைகள் எண்ணப்பட்டன
---தொடர்ச்சியாய்...!
உங்களுக்கெல்லாம்
உங்கள் மழலைகளின் மணற் வீடுகளை
கடற்கரைகள் தயாரிக்கின்றன
ஈரப்பசையோடு......
---எங்களுக்கெல்லாம்
எங்கள் சிசுக்களின் புதைக்குழிகளை
வாய்க்கால்கள் தயாரித்தன
ரத்தச்சேற்றில்....!
உங்களுக்கெல்லாம்
பொழுது போக்கிட
போரையும் யுத்தத்தையும்
திரைப்படங்கள் தயாரிக்கின்றன
--திருப்பங்களோடு
----எங்களுக்கெல்லாம்
வேதி மழையும் பாஸ்பரஸ் குண்டுகளும்
தயாரித்தன
குவியல குவியலாய் புதைக்கப்படும்
பொழுதுகளோடும்.....!!!!
தீவில் மானம்
தீர்மானமாய்
தீர்ந்தப்பின்
தீவுக்குத் தீர்வு
தீர்மானமாகுமா..?
தீவுக்கான தீர்வு தீர்மானம் மட்டுமல்ல
உங்களின் பாசமும்...
விரல் நுனி தொட்டுத்
தோள் தழுவும் தோழமையும் ...!!!
வா..வா..தோழா..!