அந்த சிவப்பு
அவளை நேரில் சந்திக்கும் வேளையில் எல்லாம் சிரிப்பினில் அன்பைக் கலந்து ஆராதிப்பாள். கண்களில் காதலைக் கலந்து ஒளி வீசுவாள். பேசிடும் மொழியில் சந்தேகமே இல்லாமல் சிதைப்பாள். அந்த அலங்கரிப்பில் ஆடிடும் அந்த அங்கத்தினை கவனிக்கத் தவறிடுவாள். நம்மையும் தவற வைப்பாள். திகைத்துத் திரும்புகையில் பறந்திருப்பாள். வலையினில் நம்மின் பக்கத்தினுள் வந்துவந்து மேய்வாள். ஆனாலும் அவள்தானா என்று அறுதியிட முடியாது. அவள் நமக்குள் வந்து ரசிக்கிறாள் என்பதினை உணரமுடியும். நேரில் காணும்பொழுதும் அடிக் கோடிட்டுப் பேசிடுவாள். ஆனாலும் சுவடுகண்டு நீயாஎனில், இல்லையே என்பாள். கதை சொல்லும் வேளை, கவிதை புனையும் சோலை, சுவையாய் நகை புரியும் சொல்லில், நம்மின் நடவடிக்கைகளில் ஒட்டி உறாவாடுதலில் கலந்துதான் இருப்பாள். தொட முயல்கையில் தூர ஓடியிருப்பாள்.
அன்று ஒருமுறை ஒரு ஓரத்தில் உரைத்த சிகப்பை சேலையில் தடவிக் கொண்டுவந்துவிட்டாள்.
விழுந்தது விழுந்ததுதான், எழவே முடியவில்லை.
நனையும் அவள் அன்பினிலிருந்து மீளவும் முடியாமல். உரசும் அவள் காதலிலிருந்து மாளவும் தெரியாமல், தெவிட்டாமல் திணறித்தான் தித்திக்கிறேன்.