தொடர் முயற்சி
அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
எந்த விதத்திலும் ஒத்த கருத்தே
இருந்ததில்லை.
அவரவர்களின் அடிப்படை
உணவுப்பழக்கத்தில் தொடங்கி
நடைமுறை வாழ்க்கை வரைக்கும்
ஏராளமான முரண்கள் இருந்தது.
அப்பாவிற்கோ கவிதைகள் பிடிக்கும்
அம்மாவிற்கோ அரசியல் மற்றும்
பொருளாதாரம்.
இருந்தும் அவர்கள் சண்டை போட்டு
நான் பார்த்ததே இல்லை.
சிறிது நேரக் கோபம்
மெல்லிய மௌனகளாக கரைய
பிறகு வழக்கம் போல வலம் வருவார்கள்
ஏதும் நடக்காதது போல.
ஒவ்வொருவருக்கான சுதந்திரம்
மற்றவர் தலையீடு இல்லாதபடிக்கு
பரிபூரணமாக இருந்தது.
அம்மாவும் நானும்
அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க
மலை ஏறும் போதெல்லாம்
அப்பாவும் உடன் வருவார்
சிலுவை சுமந்த மாரோடு.