எண்ணை குளியல்.
கண்ணாடிக்கும் எரிச்சல் வரும்
என்னை மட்டும் நீண்ட நேரம்
தொடர்ந்து பார்த்திருக்க.
தண்ணீரையும் எண்ணையையும்
ரகசிய விகிதத்தில் கலந்து தலை வார
ஆடிக் காற்றிலும் அசைந்து கொடுக்காத
கீழ்படியும் மயிற் கற்றைகள்.
காபி டிபனுக்கு நண்பர்களின் முன்பு
அம்மாவிடன் பெரிய மனுஷத் தோரணையில்
அளவான அதிகாரம்.
கைகளை சூப்பிக் கொண்டு
எல்லாவற்றையும் பார்த்து மிரண்டபடி நிற்கும்
குட்டித் தங்கையை படிக்கச் சொல்லும்
உரிமையான அதட்டல்.
இருந்தாலும் அம்மாவின் முன்னே
முழு அம்மணமாக நின்றாகவேண்டும்
ஞாயிறு எண்ணைக் குளியலுக்கு.