அந்தரங்கப்பூச்சிகள்(அகிலத்தின் இறுதிநாள்)
அகில விருட்சமதில்
ஆயிரம் மாலைகளின்
அலங்காரமாய்
அந்திப் பொழுதுகள்
அழுகிக் கிடக்கும்
.. . . . . . . . . . . . . . .ஓர் நாள்!
கதிரவ வெளிச்சம்
கருகிப்போய்
கண்ணிமைக்கும்
புலத்தில்
கருந்தேள் கடித்து
கண்டங்கள் வீங்கும்
. . . . . . . . . . .. . . . . ஓர் நாள்!
ஆழிக் கரைகளை
ஆன்மாச்சிலந்திகள்
பின்னி முடக்கும்
. . . . . . . . . . . . . . . ஓர் நாள்!
அலைகள்
சம்மணக்கால் இட்டு
அமைதிக்கற்பத்தில்
சாம்பலாகும்
. . . . . . . . . . . . . . . ஓர் நாள்!
ஆகிருதி இழந்த
அர்த்த சாமஆவிகள்
அந்தரங்கக் கனவில்
அங்கையின் காலில்
விழும்
. . . . . . . . . . . . . . . ஓர் நாள்!
அநீதிச் சருகுகளை
கூட்டிக் குவித்து
கருவறைக் காடுகள்
கதிரவக் கன்றுகளை பிரசவிக்கும்
. . . . . . . . . . . . . .. .ஓர் நாள்!
சத்தியம்பொசுக்கிய
சவத் துப்பாக்கிகள்,
சாத்தானின்
மூத்திரப் பையில்
மூழ்கிச் சாகும்
. . . . . . . . . . . . . . .ஓர் நாள்!
கருமப்பிணிகள் கக்கிய இரத்தங்கள்,
நிலத்தின்
தொண்டையில்
விக்கிச்சாகும்
. . . . . . . . . . . . . .. ஓர் நாள்!
தீயும்
திராணி யிழந்து
பனியின் மடியில்
படுத்து றங்கும்
. . . . . . . . . . . . . . . ஓர் நாள்!
பனிக்கோட்டைகள்
பழுதடைந்து நிலத்தின்
பாகப்பிரிவினை தீரும்
. . . . . . . . . . . . . . . ஓர் நாள்
அன்று நான்
உயிரோடிருந்தால்....
மீண்டும் எழுதுவேன்
"வினைகள் உடைந்து
பூமி
பரிசுத்தமாகும்"
அந்த
ஓர் நாள்
"அகிலத்தின்
இறுதிநாள்"