சித்திரப்பாவை காதலில் கேலிசித்திரமாய்..............!

உன்னைத் தேடுமென்
வாழ்நாட்களில் சிந்துவதெல்லாம்
உயிரின் துளிகளே
தீர்ந்துவிடுமுன் சேர்வாயோ
ஊர்ந்து திரியுதென் நம்பிக்கை உயிர்தளத்தில் !

கண்ணனாகவோ ராமனாகவோ
உன்னை உருவகித்துத்
தொடரும் தவமில்லை இது ,
இரண்டிலும் பிழையென்ற கொள்கையடா
முரண்டிலும் புது அவதாரமாயுனைக் கேட்பேனடா!

தெரியுமா உனக்கு
பனிப்பொழிவில் காயமுறுவதும்
மழைப்பொழிவில் எரிந்துகொண்டிருப்பதுவும் ;
உருகியே படர்கிறது காதல் திரவம்
மருகியே உறைகிறது மீண்டும் பருவம் !

ஏகாந்தம் செய்யும் சூழ்ச்சியில்
உன்னோடு கழிகிறது கனவுகள்
அதுவே இதுவரை பெரும்வாழ்வு ;
தேற்றிவிட உறவுகள் கூடியிருந்தாலும்
ஆற்றிவிடும் உள்ளமாய் உனை வேண்டுகிறேன் !

கதைகள் பல சொல்கிறேன்
உனது நெஞ்சில் சாய்ந்தபடி தினம்
கானல் நீரெனவே அதுவும் மயக்குகிறது ;
தலையணையிடமே மிழற்றும் இவளுக்கு - உன்
அரவணைப்பே காதலின் உச்சம் !

வேண்டுமெனக்கு நீ என்பாதியே
ஏக்கங்கள் நிறைந்து மூச்சடைக்கிறது
வேண்டியவைகள் எல்லாமும் உன்னிடமே ;
நேசம்கொள்ளுமே பூக்களும் என்னிடம் – பூவாய்
வாசம்கொள்வேன் நானோ உன்னிடம் !

அகக் குளத்தில் நீந்தும்
குட்டிமீன்களாய் துடிப்பது உனக்கான
தேடல்கள் மட்டுமே – வந்து
உனதன்பைக் கொண்டு நிறைத்துவிடு
எனதின்பால் உருவான கலக்கம் குறைத்துவிடு !

காத்திருப்பதிலும் சுகமென்றபோதும்
விழிகளில் வலியோடு ஊறும் கண்ணீரில்
இமைகள் ஒன்றோடொன்று ஆறுதல்பட ,
ஒவ்வொரு முறையும் காதல்தோல்வி
எவ்வகையிலும் பூர்த்தியடையாதிந்த வேள்வி !

சித்திரப்பாவை நானோ
உன்னால் கேலிசித்திரமாய் இன்று
யாருமறியாதவாறு உலாவருகிறேன் ;
தோழமைகளோ சுற்றியுள்ள பேசாதவைகளே
ஆழமாய் என்னைப் புரிந்ததுவும் அவைகளே !

தூதென நான் அனுப்புவதோ
நீக்கமற நிறைந்த காற்றில்
எங்கேயும் பயணிக்கும் வான் அலைகளே ;
சந்திக்குமந்த ஆனந்த வேளையை
சிந்தித்தபடியே உனக்கானவளாய் இவள் !

எழுதியவர் : புலமி (27-Mar-13, 1:50 pm)
பார்வை : 141

மேலே