நான் வேண்டாமென்று தூக்கியெறிந்த என் கவிதையின் அறை பேசுகிறது
காற்றின்
காலவரையற்ற
வேலை நிறுத்தத்தால்
மூடிக்கிடக்கிறது
பேனாவின்
அலுவலகங்கள்.....!!!
கசக்கி யெறிந்த
காகிதத்துண்டுகள்
அறை முழுதும்
காதலில்
தோல்வி கண்டது..........!!!
நாவலொன்றின்
நான்காவது
பக்கத்திலேயே
பேனாவொன்று
மரணித்துவிடுகிறது!
கவிஞனின் எழுத்துப்
பிழைகளை
தட்டிக் கேட்கத்தெரியாமலே
தன் ஆயுள்
இழக்கிறது.....!!!
சற்று முன்
அரிக்கன்விளக்கொன்று
எரிந்து முடிந்து
ஊடுதிரிப்புகையை
கக்கிக்
கொண்டிருக்கிறது.,....
மூக்கைப் பிடித்தபடி
மூட்டைப்பூச்சிகள்
தன் தலையில்
முட்டி முட்டி அழுகிறது
மூலையில்...
காயமடைந்துவிட்ட
கவிஞனின்
கனவுநூல்கள்,
மேசையில் இருந்த
படியே,
தூக்கில்
போடப்படுகிறது!
அந்நேரம் அங்கிருந்தது
கையாளாகாத
ஒரு
நாற்காலித்தாத்தாவும்
காரியமுடிக்க வந்த
கரையான்படையும்......
ஓ...
சன்னல்களாலும்
கதவுகளாலும்
கடலளவு எழுத்துகளை
கையகல அறையில்
அடைத்து விட்டு
இந்தக்கவிஞன்
எந்தக்காரியம் முடிக்க
போய்விட்டான்
என்று கேட்கிறது
அலமாரிப்
புத்தகங்களும்
பொக்கிஷமாய்வைத்த
காதலியின்
கடிதங்களும்
அழுது கொண்டே...