நீ நதி போல ஓடிக்கொண்டிரு…
நீ நதி போல ஓடிக்கொண்டிரு…
-------------------------------------------
• என்ன பெரிய அவமானம்? அது என்ன தூக்க முடியாத பெரும் பாரமா? அல்லது விழுங்க முடியாத களிமண் உருண்டையா? அசுத்தம் செய்தாலும், கழிவுப் பொருட்களைக் கலந்தாலும் நதிகள் அதை தாங்கிக் கொண்டு ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. விடியாத இரவென்று எதுவுமில்லை. விடுதலையாக முடியாத அவமானம் என்று எதுவுமில்லை.
• மனதில் வலிக்கும் பகுதிகளை, என்றோ சிந்திய கண்ணீரை,யார் மீதோ இருந்த வெறுப்பை, புறக்கணிப்பை பத்திரமாக வைத்து அவ்வப்போது எண்ணத்தால் தொட்டுப் பார்த்து வலிக்குது என்று சொல்வதில் ஒரு சுகம் நமக்கு.
• புற அழகை மிகவும் பிரதானப் படுத்தி, அதையே தன் வாழ்வின் மூலதனமாகவும், வெற்றியாகவும் நினைத்த எந்தப் பெண்ணும் சந்தோஷமாக வாழவும் இல்லை. நிறைவாக மரணம் எய்தவுமில்லை என்பதே வரலாறு சொல்லும் பாடம்.
• பெண்ணை சரிகைத்தாளில் சுற்றிய இனிப்புப் பண்டம் போல பத்திரப்படுத்தினால், இது என்ன என்ற ஆர்வக் கோளாறே ஆணிடத்தில் அதிகரிக்கும். அப்படியில்லாமல்,ஆணுக்குப் பெண் ஒரு தோழியாக இருந்தால் மட்டுமே,அவனுக்குப் பெண் பற்றிய சரியான அறிமுகம் கிடைக்கும்.அவளின் வலிகள் பற்றி தெளிவு பிறக்கும்.
• அல்ட்ரா மாடர்ன் பெண்களிடம் பெரும்பாலும் எந்த ஆணும் வம்பு செய்தேயில்லை. பாதிக்கப்படுவதெல்லாம் பாந்தமாக உடை உடுத்தியிருக்கும் நடுத்தரவர்க்கத்து சராசரிப் பெண்கள் தான். இவர்கள் பெரும்பாலும் குரலற்றவர்கள்.நாளைய பிரச்சனைகள் கருதி இன்றைக்கு நடக்கும் எதையும் சகித்துக் கொள்பவர்கள்.
• எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓர் அம்மாவாக வாழும் அனுபவமும்,தாயாகும்போது தன் அம்மாவைப் போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிகப் பெரிய வரம்! இறைவன் பெண்ணுக்கே கொடுத்த பிரத்தியேகக் கொடை…!
((படித்ததில் பிடித்தது))