அக்கினிக் குஞ்சென காதலை....
அக்கினி குஞ்சென
காதலை நெஞ்சில் ஏந்தி
ஆதாமின் புனிதத்தை
சுவாசிக்கிறேன்.
நிலா கர்பத்தை
இதயத்தில் சுமக்கிறேன்.
அர்த்த ராத்திரி நிசப்தத்தில்
உறக்கம் இல்லாமல்
வானத்து நட்சத்திரங்களை
உற்றுப் பார்த்து தரையில்
கிடக்கிறேன்
விடிய விடிய நித்திரை
இழந்து உன் நினைவில்
தவிக்கிறேன்
என் பிரிய சகியே சகியே
சதித்துவிடாதே.
மறுப்பு எனும் நெருப்பினால்
சாயந்திரங்களின் தத்துவங்களை
சாம்பலாக்கிவிடாதே
அந்த பஸ்மத்திலிருந்தும்
புதிய புஷ்பமாய் முகிழ்த்திடுவேன்
சாம்பல் பறவையாய் சிறகு விரித்து
உயிர்த்து எழுவேன்
உன் நினைவுகளுடனே வாழ்வேன்.
----கவின் சாரலன்

