தெரியாமலே போனது என் தாய்க்கு

கருவில்
சுமக்க ஆரம்பித்த
நாள்முதல்
கல்லூரி அனுப்பிய
நாள்வரை
பெண்பிள்ளை
என்று
பேசவிடாமல் வளர்த்தீர்கள் !

நிமிர்ந்து
பார்க்க வைக்கும்
என்
கனவுகளை
தலைகுனிந்து
நடக்க வைத்தே அழித்தீர்கள் !

விவரம் தெரிந்த
நாள்முதல்
வித்தியாசம் கண்டேன்
ஆண்பிள்ளை
என்றால்
அளவில்லா சுதந்திரம்
பெண்பிள்ளை
என்றால்
அடைக்கப்பட்ட எந்திரம் !

ஒரு நாள்
தரகன்
என்று சொல்லி
ஒருவன் வந்துபோனான் ....
மறுநாள்
தாய்மாமன்
என்று சொல்லி
ஒருவன் பேசிபோனான் ....
ஜாதி
பார்த்தாய்
ஜாதகத்தை பார்த்தாய்
ஒருமுறை
என்
முகத்தை பார்த்தாயா ?
பட்டு உடுப்புகளை
பார்த்தாய்
பஞ்சாங்கத்தை பார்த்தாய்
பாவமாய்கிடந்த
என்
மனதை பார்த்தாயா ??

நீ
தலைகுனிய வைத்தே
வளர்த்ததால்
கடைசிவரை
உனக்கு
தெரியாமலே போனது .....
என்
முகத்தில் இருந்த
ஏக்கங்களும்
கண்களில் இருந்த
கண்ணீர் துளிகளும் !!!
-சுரேஷ் குமார்.

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (9-Apr-13, 4:04 pm)
பார்வை : 106

மேலே