மாணவர்(ஆடை} புரட்சி
தாவணிக்கு லாவணியும்
சுடிதாருக்குச் சுகந்தமும்
பாடிய என் இளைஞர் கூட்டம்
சவத்துணி சந்தித்து
இன்னொரு
தேசிய கீதம் சிந்தித்த
கணங்கள் தான்
தேசியக்கொடி
இமயத்தில்
பறந்திட்ட நொடிகள்
இனி
ஜீன்ஸில் வந்து
கலாச்சார உடையின்
பெருமை பேச
சிறப்பு விருந்தினர்களால் இயலாது
இனி
உள்ளாடை விளம்பரத்தின்
ஊழல் பேசி
மேலாடை இல்லாதவர்
நிலை மறைக்க முடியாது
இனி
பட்டுவேட்டியை
இலவசமாய்க் கொடுத்து
கோவணம் களவாடும் கதை
இங்கு நடக்காது
இனி
வெள்ளைப் புடவை உடுத்திய
வெள்ளந்தியானவர்களை
தவறாய் பேச நாக்கு பிறழாது
இனி
கறுப்பாடைகள் மட்டுமல்ல
பூநூல்களும்
புயலாய்ப் புறப்படும்
புரட்சி தேவைப்படும் இடங்களுக்கு
கதராடையில் படியும்
கரையைப் போல
காக்கிச் சட்டையில் படியும்
கரைகளையும் கண்டுபிடிக்க
கரை கடந்து விட்டது
ஒரு சூறாவளி
எண் பத்து
அச்சிட்ட பனியன் பிடித்த
என் இளைஞர்களுக்கு
சேகுவாரா படம் போட்டவைகளும்
பிடிக்க துவங்கி இருக்கிறது ..

