.............ஆண் வர்க்கம்...............
எனக்கென்று படைக்கப்பட்ட நீ !
எப்படி எனக்குப் பிடிக்காத,
விசயங்களைச்செய்யலாம் ?
எனக்கான மாற்றங்களைத்தவிர்க்கலாம் ?
எனக்கு பிடித்த நிறத்தை உடுத்தாமல்,
எனக்கு பிடித்த உணவைச்சுவைக்காமல்,
உன்னவன் என்று என்னைக் கொண்டாடுவதில்,
என்ன அர்த்தம் இருக்கிறது பெண்ணே ?
உனக்காக வாழ்கிற எந்தனது எண்ணங்களை,
உச்சிமுகர்ந்து நடைமுறைப்படுத்தாமல்,
உன்போக்கிலேயே நடந்தால்,
என்னடி அர்த்தம் நாம் வளர்த்த காதலுக்கு ?
நான் உனக்கென்று ஆகி வருடக்கணக்கானபின்,
உற்றுநோக்குகிறேன் உன்னை !
உனக்குப் பிடித்தவைகள் எனக்கு பரிச்சயமில்லாதவைகள் !
நான் பிடிக்காதென ஒதுக்கிய விசயங்கள் !
நான் கேட்கிறேன் ?
என்ன விசயத்தில் ஒத்துப்போகிறாய் நீ என்னுடன் ?
என் கனவுகளை கொலுவில் ஏற்றாமல்,
கொள்ளி வைக்கிறாயே அனைத்திற்கும் மொத்தமாய் !
ஆசைகளை நிராசைகளாக்கவா நாயகியானாய் எனக்கு ?
மனது ஆறாத ரணங்கள் எனக்குள் உன்னால் !
எங்கே போனது எனக்கான உனது வாழ்க்கை ?
மொத்தத்தில் உயிரெனக்கருதினாலும்,
நீ நினைப்பதேயில்லை எனை உற்றவனாய் !
உனக்காக மூச்சுவிட்டு என்ன பிரயோஜனம் எனக்கு ?
தயங்கி ஒதுங்காமல் பளிச்சென்று பதிலைச்சொல் !
எனக்காக வாழ்வதினும் பெரிதாய்,
என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது பெரிதாய் உனக்கு ?
அனைத்தையும் ஒதுக்கி வந்து அடை சரணாகதி !
எனை உணர்ந்து அம்மணி !
ஆண் உன் ஆதாரசுருதி !!